ஆன்மிகம்
திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா

வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா நாளை கொடியேற்றம் நடக்கிறது

Published On 2021-03-10 03:33 GMT   |   Update On 2021-03-10 03:33 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்கா கந்தூாி பெருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திரப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த, 2-ந் தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முன்னதாக திட்டுவிளை உதுமான் லெப்பைசாகிபு சுன்னத் ஜமாத் நிர்வாக தலைவர் மைதீன்பிள்ளை தலைமையில், தர்காவில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் ஜமாத் இமாம் அசன் அலியார், தர்கா இமாம் அப்துல் லத்தீப், நல்லாசிரியர் முகமது ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவா ஓதுகிறார்கள். பின்னர் தர்காவில் இருந்து பிறைக்கொடி எடுத்து வந்து அதன் முன்பக்கம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் இரவு 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மக்களும் கலந்து கொள்வார்கள். இதற்கு கலீல்ரகுமான், முகமது முஸ்தபா, முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பக்தர்களால் நேர்ச்சை வழங்கப்படுகிறது.

இரவு 8.30 மணிக்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமையில் மார்க்க பேருரை நடக்கிறது. முகமது ஹனிபா அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குளச்சல், செய்யது மிர்காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன் நன்றி கூறுகிறார்.

விழாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தப்றுக் என்ற நேர்ச்சை வழங்குதல், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திட்டுவிளை உதுமான் லெப்பைசாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகமது ரபீக் ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News