செய்திகள்
சிறை

திருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி

Published On 2019-09-20 04:41 GMT   |   Update On 2019-09-20 04:41 GMT
சேலத்தில் திருமணமான 7 நாளில் காதல் கணவரை காதலி சிறைக்கு அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:

சேலம் அழகாபுரம் வாழப்பாடியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 26). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சோபியா (24).

இருவரும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து பேசினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 8 வருடங்களாக உயிருக்குயிராக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்தது.

இந்தநிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுரேஷ்குமார் பெற்றோர் அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலர்கள் கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். தனிமையில் சந்தித்தும்,செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர். மேலும் தங்களை பிரித்து விடுவார்களோ என்றும் காதல் ஜோடி அஞ்சியது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி யாருக்கும் தெரியாமல் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. பின்னர் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற அவர்கள் அங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்ற அவர்கள் சேலம் திரும்பினர். பெற்றோர் வீட்டிற்கு சென்றால் பிரச்சனை ஏற்படும் என்பதால் சேலம் சூரமங்கலம் சின்னப்பன்நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.

ஆனால் அந்த சந்தோ‌ஷ வாழ்க்கைக்கு இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் பிரச்சனை ஏற்பட்டது. சுரேஷ் குமார் குடும்பத்தினருக்கும், சோபியாவுக்கும் ஜாதி ரீதியதாக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜாதி பிரச்சனையால் தொடக்கத்திலேயே தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த சோபியா இவருடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை உறுதி செய்து கணவரை பிரிந்து விட முடிவு செய்தார்.

மேலும் காதல் கணவர் என்றும் பாராமல் அவர் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜாதியை சொல்லி திட்டியதாக சுரேஷ்குமார், அவரது தந்தை ஏழுமலை, தாய் மகாலெட்சுமி ஆகிய 3 பேர் மீதும் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது பெற்றோரை தேடி வருகிறார்கள்.

திருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலியால் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலும் நிலவி உள்ளது. இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News