செய்திகள்
அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்திய காட்சி.

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விவசாயிகள்

Published On 2019-08-30 17:34 GMT   |   Update On 2019-08-30 17:34 GMT
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று காலை 10.30 மணிக்கு அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வாசல் முன்பு பச்சை துண்டுகளுடன் திரண்டனர். 
மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாசலின் முன்பு திடீரென தலைகீழாக நின்று கோஷம் போட்டனர். சில விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்தனர். சிலர் முட்டி போட்டுக் கொண்டுகண்ணீர் விட்டனர். ஒரு வயதான விவசாயி கடன் தள்ளுபடி செய்யாததால் வறுமையால் விவசாயிகள் சாப்பாட்டிற்கு வழியின்றி தவிப்பதாக கூறி எலியை வாயில் கடித்து கொண்டு கோஷம் எழுப்பினார்.

அப்போது ஒரு விவசாயி திடீரென கூட்டத்தில் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு கழுத்தை அறுக்க முயன்றார். அவரை விவசாயிகள் தடுத்தனர். அப்போது கதறி அழுத அவர் மத்திய அரசு டெல்லியில் விவசாயிகள் 140 நாட்கள் பல போராட்டங்கள்  நடத்தி உணர்வை வெளிபடுத்தியும், கண்டு கொள்ள மறுக்கிறது. இதனால் தற்கொலை செய்து கொள்வது தவிற வேறு வழியில்லை என கதறினார்.

அப்போது திருச்சி விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து 17 நாட்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கடை மடை வாய்க்கால்களுக்கு வந்து சேரவில்லை. 10 ஆயிரம் கனஅடிக்கு பதிலாக 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்தால் தான் கடை மடைபகுதிக்கு தண்ணீர் வரும். விவசாயிகளையாரும் கண்டுகொள்வது இல்லை என்பதால்தான் இப்படி வெயிலையும், எங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் போராடுகிறோம் என்றனர். 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை உதவி போலீஸ் கமிஷனர்கள் மணிகண்டன்,சந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கூறி அமைதிப்படுத்தினர். அதற்கு விவசாயிகள் மத்திய, மாநில அரசுகள் எங்களை பற்றி அக்கறை காட்டவில்லை. எங்களை தடுக்காதீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.

முன்பதாக இன்று காலை வெள்ளிக்கிழமை என்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்காக கலெக்டர், வருவாய் ஆட்சியர், தாசில்தார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலெக்டர் அலுவலகம் வாசல் வழியாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

விவசாயிகள் போராட்டம் நடந்த இடம் வழியாக செல்லும் போது வேகவேகமாக சென்று விட்டனர். டெல்லியில் போராட்டம் நடத்தினோம். ஆளுங்கட்சியினர் சந்திக்க வில்லை, தமிழகத்தில் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எங்கள் நிலைமையை எப்போது தான் புரிந்து கொள்வார்கள் என வேதனைப்பட்டனர். 

அதன் பிறகு கலெக்டர் சிவராசு தலைமையில்நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அய்யாகண்ணு தலைமையில் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் மேட்டூர் அணையில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்காததால் எங்களுக்கு 17 நாட்கள் ஆகியும் தண்ணீர் வந்து சேரவில்லை. மழை யும் பெய்யவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. 

இந்த நிலையில் வங்கிகள், கடனை திருப்ப செலுத்தவில்லை என்று கூறி விவசாயிகளின் டிராக்டரை ஜப்தி செய்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கலெக்டர் தடுத்தும், விவசாயிகள் அடகுவைத்த நகைகளை ஏலம் விடுகிறார்கள். நிலத்தை விற்று விடலாம் என பத்திரபதிவு அலுவலகம் சென்றால் அதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். 

இதனால் தற்கொலை செய்வது தவிர வேறு வழியில்லை. எனவே தண்ணீர் திறக்கவும், விதை நெல் பட்டா கிடைக்கவும், சார்பதிவாளர்கள் உதவி செய்யவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். 

மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சிவராசு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
Tags:    

Similar News