செய்திகள்
தென் மேற்கு மூலையில் என்ன அமைக்கலாம்

வீடும் வாழ்வும்: தென் மேற்கு மூலையில் என்ன அமைக்கலாம்?- ஜோதிடச்சுடர் எம்.எஸ். இராமலிங்கம்

Published On 2021-11-09 10:32 GMT   |   Update On 2021-11-09 10:32 GMT
தெற்குச்சுவர், மேற்குச்சுவர் இணைகிற இடமாகிய தென் மேற்கில் முக்கியமான பொருட்களை வைத்து பாதுகாக்கலாம்.


கடந்த வாரக் கட்டுரையில் ஒரு வீட்டில் அதாவது அது கிழக்கு, மேற்கு நீண்ட அல்லது வடக்கு, தெற்கு நீண்ட செவ்வக வடிவான வீடாக இருந்தால் அதில் உள் அறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியாக இனியும் சில இதோ...

ஒரு வீட்டில் நேர் தெற்குத்திசை எனும் 180 டிகிரியை மையமாகக் கொண்ட அறை என்பது சிறந்தது அல்ல. ஒரு மனிதனுடைய வீரியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சீர்குலையச் செய்து வியாதிகளை உருவாக்கும் அறையாகவே இது காணப்படுகிறது.

எனவே தெற்கு அறை விசே‌ஷமில்லை என்றாலும், சில வீடுகளில் வேறு வழியின்றி இடக்காரணங்களால் தெற்கில் அறை அமைந்தால் அதை சில விதிகளின் கீழ் பயன்படுத்த வேண்டும்.

முதலாவதாக அந்த அறைக்குச் செல்ல வேண்டிய வாசலானது, அறையின் வடக்குப் பக்கத்தில் வடகிழக்கில் வடக்கு நோக்கி அமைய வேண்டும்.

மேலும் அந்த அறையின் தெற்குச் சுவற்றில் கிழக்கு சார்ந்து அதாவது உள் நுழையும் வாசலுக்கு நேர் எதிரில் ஜன்னல் அமைய வேண்டும். குறிப்பாக தென் மேற்கில் ஜன்னல் அமையக்கூடாது, வடமேற்கில் வாசல் அமையக் கூடாது.

அந்த அறையின் மேற்குச்சுவர் சார்ந்து, வடக்கு ஒட்டி வடமேற்கில் தெற்கும், வடக்குமாக கட்டில் போட்டு தெற்கில் தலை வைத்து படுக்க வேண்டும்.

குறிப்பாக வளரும் இளம் பிள்ளைகளுக்கு இந்த அறை கொஞ்சம் நல்லது. வாலிப மற்றும் சற்று வயதானவர்களுக்கு இந்த தெற்கு அறை சிறப்பைத் தராது.

தெற்குச்சுவர், மேற்குச்சுவர் இணைகிற இடமாகிய தென் மேற்கில் முக்கியமான பொருட்களை வைத்து பாதுகாக்கலாம்.

குறிப்பாக அன்றாடம் புழங்குகிற பணம், வைத்து எடுப்பது சிறப்பில்லை. அவ்வாறு செய்கிற போது விரைவில் கடன், தகராறு போன்றவை வந்துவிடும். தங்கம் போன்ற கனமான உலோகச் சாமான்கள் வைத்து புழங்கலாம். கடினமான பீரோ, கபோர்டு போன்றவை வைக்கலாம். துணிகள் வைப்பதுகூட சிறப்பில்லை. துணிகள், அன்றாடம் பயன்படுத்தும் நகைகள் இவற்றை வடமேற்கு மூலையில் வைத்துப் புழங்குவது குடும்பத்திற்கு நன்மை தரும்.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒரு வேளை இந்த அறை மாஸ்டர் பெட்ரூம் என அமைந்துவிட்டால் கூட நான் மேற்கூறியவாறு இந்த அறைக்குள் கட்டில் போட்டு தூங்கலாம். இருப்பினும் இந்த அறையில் தூங்கும் கணவன்-மனைவி இந்த அறையின் உள்ளே வைத்து வாக்கு வாதங்கள் செய்வது சிக்கலாகி விடும். எந்த மாதிரியான வருங்காலத் திட்டங்களும் இந்த அறையில் வைத்துப் பேசுவது நன்மை தராது. எனவே இரவுத் தூக்கத்திற்கான இடமாக மட்டும் இது பயன்படும்.

இந்த அறையில் பரண்கள் அமைக்க வேண்டுமாயின் மேற்குச் சுவரில் மட்டும் அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு மேற்குச் சுவற்றில் அமைக்கப்படும் பரண்களில் கூட அவற்றை கதவுகள் செய்து மூடி விடுவது நன்மை.

மேலும் இந்த அறையின் உள்ளே குளியலறை அமைக்கும் போது கிழக்குக் சுவற்றைச் சார்ந்து தெற்கு, வடக்காக குளியலறை அமைத்துக் கொள்ளலாம். இந்த குளியலறையின் உள்ளே தெற்குக் சுவரை ஒட்டி வடக்கு நோக்கி அமரும்படி கிளாஸ்செட் வைக்கலாம்.


 

கிழக்குச்சுவரில் குளியல் பைப் மாட்டிக் கொள்ளலாம். வடகிழக்கு மூலையில் வாஸ்பேசின் மாட்டிக் கொள்ளலாம். இந்த குளியல் அறைக்குச் செல்ல வாசலானது மேற்கு நோக்கி, வடக்குச் சுவரின் அருகில் வைக்கலாம். வடமேற்கில் வாசல் வைக்கலாம்.

குறிப்பாக வளரும் சிறுவர்கள் இந்த அறையில் வைத்து பாடங்கள் பயிலுவது சிறப்பைத் தராது. மாறாக மூர்க்க குணங்களை உண்டாக்கி, தன் பெற்றோருக்கும் தனக்கும் உறவுச் சிக்கலை உண்டாக்கி விடும்.

விருந்தினர்களுடன் அமர்ந்து கொண்டு உறையாடுவது மற்றும் வீட்டில் நடக்கவுள்ள சுப காரியம் பற்றி பேசுவது அதற்கானத்திட்டங்கள் போடுவது போன்ற காரியங்களும் சிறப்புத் தராது.

இந்த அறையில் சாமி படங்கள் மாட்டி பூஜை செய்வதும் சிறப்பைத் தராது. எனவே தெற்கு மூலையைப் பயன் படுத்துவதில் அதிக கவனம் வேண்டும். இதுவே எமதர்மராஜனின் இடமாகும்.

இதுபோல ஒரு வீட்டின் தென்மேற்கு மூலையில் அறை அமையுமாயின் உண்மையாகவே அதி உத்தமம்.

ஒரு வீட்டில் தம்பதியர் எனும் கணவன்- மனைவி உறங்கும் இடம் இதுதான். இந்த தென்மேற்கு மூலையில் படுக்கை அறை அமைந்தாலே அதிர்ஷ்டம்தான்.

குடும்பக் குதூகலத்திற்கு காரணமான இடம். திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஒற்றுமையோடு வாழுவதற்கும் அழகான தங்களுக்கான வாரிசுகளை பெற்று எடுப்பதற்கும் ஏதுவான இடம். இந்த தென்மேற்கில் ஒரு வீட்டில் படுக்கை அறை அமைவது சாலச் சிறப்பு.

இந்த தென்மேற்கில் தாங்கள் உழைத்துக் கொண்டுவந்த செல்வங்கள் மீண்டும் மீண்டும் பெருகுமிடம்.

ஆகையால் இந்த தென்மேற்கு மூலையில் படுக்கை அறை அமையும் போது குறிப்பாக இந்த அறைக்கு வாசலானது கிழக்கு நோக்கி, வடகிழக்கு மூலையில்தான் அமைய வேண்டும். வடக்கு நோக்கி வாசல் அமைவது குடும்பச்செழிப்புக்கு குந்தகமாகி விடும். ஆனால் இதுவே உங்கள் தொழில் நடக்கும் அலுவலகமாக இருந்தால் வடக்கு நோக்கி, வடகிழக்கு மூலையில் வாசல் அமையலாம்.

வீடாக இருக்கும் பட்சத்தில் இந்த தென்மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையானது மற்ற அறைகள் அமைந்துள்ள தளத்தைவிட சற்று உயரமாகத் தளத்தை அமைக்க வேண்டும்.

குறிப்பாக இந்த தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள அறையின் மேற்குச் சுவற்றில் வடக்கு சார்ந்து வடமேற்கில் மேற்கு நோக்கி ஜன்னல் வைக்கலாம்.

இதேபோல் தெற்குச் சுவற்றில் கிழக்கு சார்ந்து ஓரமாக ஜன்னல் வைக்கலாம். குறிப்பாக தென்மேற்கு மூலையில் ஜன்னல்கள் வைக்கக்கூடாது.

தென்மேற்கு மூலையில் ஜன்னல் வைத்து திறந்து வைத்தால் அந்த வீடு தெய்வ அருள் இன்றி காலப் போக்கில் துன்பமாகிவிடும்.

தென்மேற்கு மூலையில் முடிந்த மட்டும் பால்கனி அமைப்பைத் தவிர்ப்பது நல்லது. மேலும் தென்மேற்கு மூலையில் தான் நீங்கள் சேர்க்கும் பணத்தைச் சேமிக்கவும் அதன் மூலமாக குடும்ப மகிழ்ச்சி மற்றும் வாழையடி வாழையாக குடும்ப முன்னேற்றம் உண்டாகும்.

ஒரு வீட்டில் தென்மேற்கு மூலை சரியாக அமைந்தால்தான் அந்த வீடு மற்றும் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு ஆரோக்கியம், பணபலம், கொண்டாட்டம், உறவினர் சுகம், நல்ல வழியில் அனைவரும் முன்னேறுவது போன்றவை நடக்கும்.

சில வீடுகளில் தென்மேற்கு மூலையில் பூஜை அறை அமைப்பதும் உண்டு. இதுவும் சிறப்புதான். சிலருக்கு படுத்துத் தூங்கும் இடத்தில் சாமி படங்கள் வைத்து வழிபடலாம் என்ற கேள்வி உண்டு.

சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடமாக பூஜை அறை கருதப்படுவதால் படுத்துத் தூங்கும் இடம் பூஜை அறைக்கு உகந்தது அல்லதான்.

ஆனால் படுக்கை அறைக்கு வெளிப்புறத்தில் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி சாமி அறை வைத்துக் கொள்ளலாம்.

தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள படுக்கை அறையில் பரண்கள் மற்றும் கபோர்டுகள் அமைக்கும் பட்சத்தில் தெற்குச் சுவற்றில் மட்டும் பரண்கள் அமைந்தால் போதுமானது. அவசியம் ஏற்பட்டால் மேற்குச் சுவரில் பரண் அமைக்கலாம். குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்குச் சுவற்றில் பரண்கள் மற்றும் கபோர்டுகள் அமைக்கக் கூடாது.

மேலும் இந்த தென்மேற்கு மூலை படுக்கை அறையில் தெற்கு நோக்கித் தலை வைப்பதாகக் கட்டில் போட்டுத் தூங்கலாம். முடிந்த மட்டும் மையமாகவும் சற்றே மேற்குத் தள்ளியும் கட்டில் போட நல்லது.

தெற்கில் தலைவைத்துப் படுக்கலாமா? என ஓர் கேள்வி எழும். ஏனெனில் இறந்தவர்களைத் தானே தெற்கில் தலை வைத்துக் கிடத்துவார்கள் எனத் தோன்றும்.

அப்படியல்ல. இந்த படுக்கை அறையில் தெற்கு நோக்கித் தலைவைத்துப் படுக்கலாம். இரண்டாவது அம்சமாக மேற்கு நோக்கி தலை வைத்தும் தூங்கலாம். இப்படித் தலைவைத்துத் தூங்கும் போது முடிந்த மட்டும் இந்த அறையின் தெற்கு சார்ந்து கட்டில் போட்டு தூங்கலாம்.

குறிப்பாக இந்த தென்மேற்கு மூலையில் தான் பீரோ, பணப்பெட்டி, விலை உயர்ந்த பொருட்களின் பாதுகாப்பு பெட்டகம், முக்கியமான தாஸ்தாவேஜுகள் அனைத்தையும் பாதுகாக்குமிடமாகும்.

இதுபோல பயன்படுத்துவோரின் இல்லங்கள், செல்வச் செழிப்பு, மனமகிழ்ச்சி மணவாழ்வில் சந்தோ‌ஷம். பிள்ளைகளின் மூலம் மன நிறைவு என சகல விருத்திகளும் உண்டாகும்.

பொதுவாக உங்கள் வீடு எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் இந்த குறிப்பிட்ட தென்மேற்கு மூலையில் படுக்கை அறை அல்லது சாமி அறை மற்றும் மேலே சொன்ன பொருட்கள் சேமிக்கும் அறை என அமைத்துக் கொண்டாலே உங்கள் வீட்டில் ஐம்பது சதவீதம் வாஸ்து தோ‌ஷங்கள் நிவர்த்தி பெற்றுவிடும்.

இப்படிப்பட்ட அனேக முக்கியத்துவம் கொண்ட இந்த அறைக்குள் கழிவறை எப்படி அமைப்பது என்பதும் மிக முக்கியம். குறிப்பாக குளியலறை அமைக்கும் போது இந்த அறையின் வடமேற்கில் வரும்படி அமைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் வடக்குச் சுவர் சார்ந்து, கிழக்கு மேற்காக கழிவறை அமைக்க வேண்டும். அந்த கழிவறையின் வாசலானது தெற்கு நோக்கி, கிழக்கு சார்ந்து அமைய வேண்டும். கழிவறையின் தென்கிழக்கில் அமைய வேண்டும்.

தென்மேற்கு மூலை படுக்கை அறையின் உள்ளே துணிகள் வைப்பதற்கும் அழகு செய்வதற்கும் அலமாரி மற்றும் கண்ணாடிகளை வடகிழக்கு மூலையில் பொருத்திக் கொள்ள வேண்டும். அவசியமற்ற பழைய பொருட்கள் அல்லது சுத்தமற்ற நிலை, தூசுபடிய விடுவது போன்ற நிலைகளைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக உங்கள் வீட்டில் படுக்கை அறையானது 270 டிகிரிகளை மையமாகக் கொண்டு அமைந்திருக்குமாயின் இது மேற்கின் மையத்தில் இருப்பதாக அமையும்.இந்த நடுமேற்கு எனும் இடத்தில் படுக்கை அறை அமைவது கூட முதல்தரமான அமைப்பு இல்லை. இதை இரண்டாம் தரமான படுக்கை அறையாகவே வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

இந்த அறைக்கும் வடகிழக்கு மூலையில் கிழக்கு நோக்கி உள்ளே சென்று வரவாசல் வைக்க வேண்டும். இந்த அறையின் தளமும் மற்ற இடங்களைவிட சற்று உயரம் கூடுதலாக இருப்பது மிக நல்லது.

மேலும் இந்த மேற்குத்திசை படுக்கை அறையில் உள்ளே தெற்குச்சுவர் ஒட்டி மேற்குச்சுவர் ஒட்டி, மேற்கு நோக்கித் தலைவைத்து படுக்கும்படியாக கட்டில் போட்டு தூங்கலாம். இந்த அறைக்குத் தேவையான ஜன்னல்களை மேற்குச் சுவரில் வடக்கு ஒரமாக மேற்கு நோக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதேபோல தெற்குச்சுவரில் கிழக்கு சார்ந்து தெற்கு நோக்கி ஜன்னல் வைக்கலாம். வாய்ப்பு இருக்குமானால் வடக்குச் சுவரில் மிக அழகாக பெரிய அளவில் ஜன்னல் வைத்துக் கொள்ளலாம்.

முடிந்த மட்டும் இந்த அறையில் பணப்பெட்டி, முக்கியமான பொருட்கள் சேமிப்பது மற்றும் பாதுகாப்பது நல்லதல்ல. அவசியமற்ற தேவையற்ற பொருட்களைப் போட்டு வைக்க சிறந்த இடம்.

இந்த அறைக்குள் குளியலறை அமைப்பதாயின் வடக்கு சுவர் சார்ந்து, கிழக்கு மேற்காக கழிவறை அமைக்கலாம். பொதுவாக இந்த மேற்குத்திசை படுக்கை அறையை முடிந்த மட்டும் தவிர்க்க வேண்டும்.

தொடர்புக்கு: msramalingamastrologer@gmail.com

Tags:    

Similar News