உடற்பயிற்சி
சுஜி முத்திரை, லிங்க முத்திரை

ஆசனவாய் அரிப்பு- மலச்சிக்கல் வராமல் தடுக்கும் முத்திரைகள்

Published On 2022-01-24 02:34 GMT   |   Update On 2022-01-24 07:42 GMT
ஆசனவாய் தசைகளில் வெடிப்பு, அரிப்புகள், தசை வெளிவருதல், மூலம், உள் மூலம், வெளி மூலம் போன்ற பல பிரச்சினைகள் வராமல் ஆசனவாய் சிறப்பாக இயங்கச் செய்யும் முத்திரைகள் உள்ளன.
மனித உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க உடலில் கழிவுகள் சரியாக வெளியேற வேண்டும்.  ஆசனவாய் பகுதி நல்ல பிராண சக்தி பெற்றிருக்கவேண்டும்.  ஆசனவாய் தசைகளில் வெடிப்பு, அரிப்புகள், தசை வெளிவருதல், மூலம், உள் மூலம், வெளி மூலம் போன்ற பல பிரச்சினைகள் வராமல் ஆசனவாய் சிறப்பாக இயங்கச் செய்யும் முத்திரைகள் உள்ளன.  இதனை காலை, மாலை இருவேளையும் சாப்பிடும் முன் பயிலுங்கள்.

சுஜி முத்திரை:

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண்களை திறந்து சுண்டுவிரல், மோதிரவிரல், நடுவிரலை உள்ளங்கைக்குள் படும்படி மடித்து கட்டை விரலை மோதிர விரலின் மையத்தில் வைக்கவும்.  ஆள்காட்டி விரலை மட்டும் வலப்பக்கம், இடப்பக்கம் படத்தில் உள்ளது போல் பக்கவாட்டில் இருகைகளையும் வைக்கவும்.  இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.  பின் சாதாரண நிலைக்கு வரவும்.

இது மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.  காலை, மாலை உடலில் மலம் சரியாக வெளியேறும்.

லிங்க முத்திரை:

உடல் சூடு சரியாகவில்லை என்றாலும் மலம் வெளிவருவதில் சிரமம் இருக்கும்.  உடல் சூட்டை சரி செய்யும் லிங்க முத் திரையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண்களை திறந்து எல்லா கைவிரல்களையும் கோர்த்து இடது கை கட்டைவிரல் மட்டும் நேராக படத்தில் உள்ளதுபோல் இருக்கட்டும்.  சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.  காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

உணவு:

சாத்வீகமான உணவு முறைகள் உட்கொள்ள வேண்டும்.  பழங்கள், கீரைகள் அதிகம் எடுக்கவும்.  அதிக மலச்சிக்கல், ஆசனவாய் அரிப்பு உள்ளவர்கள் இரவு வாழைப்பழம் இரண்டு (நாட்டு வாழைப்பழம்) அரைமுடி தேங்காய் மட்டும் உணவாக எடுத்து ஒரு மண்டலம் 48  நாட்கள் சாப்பிடவும்.    நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பழங்கள்:

உலர்ந்த திராட்சை, பப்பாளி, மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், மாதுளை அடிக்கடி உண்ணவும்.

காய்கறிகள்:

சுரைக்காய், பூசணிக்காய், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், பாகற்காய், புடலங்காய், அவரை, முட்டைகோஸ் அடிக்கடி உண்ணவும்.

கீரைகள்:

முருங்கை கீரை, அகத்தி கீரை, வெந்தய கீரை, கருவேப்பிலை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி கீரை உணவில் அடிக்கடி உண்ணவும்.

யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
Tags:    

Similar News