செய்திகள்
அமித்ஷா

அதிமுக தலைவர்களுடன் அமித்ஷா நாளை பேச்சுவார்த்தை- ரஜினி, மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பு

Published On 2020-11-20 09:36 GMT   |   Update On 2020-11-20 09:36 GMT
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ஜனதா சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்களுடன் நாளை அமித்ஷா முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5½ மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு கூட்டணியும் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவாக காலூன்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அக்கட்சி தங்கள் பக்கம் இழுத்துள்ளது.

சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த நடிகை குஷ்பு இதில் முக்கியமானவராகவே கருதப்படுகிறார்.

இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான அமித்ஷா நாளை சென்னை வருகிறார். தமிழகத்துக்கு தேவையான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் அமித்ஷா, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களும் இல்லாத நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் கணிசமான சீட்டுகளை இரட்டை இலக்க எண்ணிக்கையில் பெற்றுவிட வேண்டும் என்பதில் அக்கட்சி தலைவர்கள் உறுதியாக உள்ளனர். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற்று அதில் களமிறங்கி, வெற்றிக்கனியை பறிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான வியூகத்தையே நாளை அமித்ஷா தொடங்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ஜனதா சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்களுடன் நாளை அமித்ஷா முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்.

நாளை மதியம் 1 மணியளவில் விமானத்தில் சென்னை வரும் அமித்ஷாவுக்கு பா.ஜனதா கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

இதன்பின்னர் சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகர் கடற்கரையை ஒட்டியுள்ள லீலாபேலஸ் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். அமித்ஷா அங்கு மதிய உணவு அருந்துகிறார். அந்த ஓட்டலில் வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி தொடர்பாக விரிவாக பேச உள்ளனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாகவும், கூட்டணி பற்றியும் நாளைய சந்திப்பின்போது அமித்ஷாவுடன் மூத்த நிர்வாகிகள் பேசுகிறார்கள் என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. தலைவர்களுடனான இந்த சந்திப்பு முடிந்த பிறகு கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் அமித்ஷா பங்கேற்று விட்டு மீண்டும் லீலாபேலஸ் ஓட்டலுக்கு செல்கிறார்.

அங்கு நாளை மாலையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியும், தமிழக நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டறிகிறார். பா.ஜனதா வேல் யாத்திரை பற்றியும் அமித்ஷாவிடம் தமிழக நிர்வாகிகள் விளக்கி கூறுகிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு பா.ஜனதா பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. இதற்காக பாராளுமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணியை அப்படியே தொடரவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட பெரிய கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் அக்கட்சி உறுதியாக உள்ளது.

இது தொடர்பாகவும் அ.தி.மு.க. தலைவர்களுடனான சந்திப்பின்போது அமித்ஷா விவாதிக்க வாய்ப்பு உள்ளது. இப்படி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசை முந்திக் கொண்டு பா.ஜனதா தலைவர் அமித்ஷா களம் இறங்கி இருப்பது அக்கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தை எப்படியும் களம் இறக்கி விட வேண்டும் என்பதில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ரஜினியே மிகப்பெரிய ஆயுதமாக இருப்பார் என்று பா.ஜனதா நம்புகிறது.

இதன் காரணமாக ரஜினியை அரசியலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அக்கட்சி தீவிரமாக உள்ளது. இதற்காக நாளை சென்னை வரும் அமித்ஷா, ரஜினிகாந்தை சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பு நடைபெறும் இடம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நேரில் சந்திக்க வாய்ப்பு இல்லாவிட்டால் வீடியோ கால் வழியாக ரஜினியுடன் பேச அமித்ஷா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை இதற்கு முன்பு கூறி வந்துள்ள அழகிரி, சில மாதங்களாக அமைதியாகவே இருந்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் தொடர்பாக அழகிரி முக்கிய முடிவை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற சூழலில் சில நாட்களுக்கு முன்பு அழகிரிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் நேரடியாகவே அழைப்பு விடுத்தார். பா.ஜனதாவுக்கு அழகிரி வந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை வரும் அமித்ஷாவை, அழகிரி சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மதுரையில் இருந்து அழகிரி காரில் இன்று சென்னை புறப்பட்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுபோன்று அமித்ஷா- அழகிரி சந்திப்பு நடந்தால் அது தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது தவிர மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.

அமித்ஷா இதற்கு முன்பு வகுத்த தேர்தல் வியூகங்கள் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜனதா கட்சிக்கு வெற்றியை ஈட்டி தந்துள்ளன. சமீபத்தில் நடந்த பீகார் தேர்தலில் அமித்ஷா வகுத்த வியூகத்தாலேயே பா.ஜனதா கூட்டணி வெற்றியை ருசித்தது.

அதுபோன்று தமிழகத்திலும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. துணையுடன் எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார். அவரது இந்த வியூகம் எப்படி கை கொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்படி அமித்ஷா வருகை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News