செய்திகள்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர்: ஒரு நிறுவனம் கூட ஆர்வம் காட்டவில்லை

Published On 2021-06-06 12:35 GMT   |   Update On 2021-06-06 13:30 GMT
தமிழகம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் கோரியிருந்தன.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு மாநிலம் வாரியாக தடுப்பூசி வழங்கி வருவதால், 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. 

அதன்படி உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 12-ந்தேதி கோரப்பட்டுள்ளன. 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த டெண்டருக்கு ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அன்றைய தினம் பகல் 12 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு, தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான நிறுவனம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு நிறுவனம் கூட டெண்டர் கோர ஆர்வம் காட்டவில்லை. இதை தெரிவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் ஒருமுறை உலகளாவிய டெண்டர் விடப்படும். தடுப்பூசி  விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு அபத்தமானது எனத் தெரிவித்துள்ளார்.

கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் எந்த நிறுவனங்களும் டெண்டர் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News