செய்திகள்

பிளாஸ்டிக் தடையை ரத்து செய்யாவிட்டால் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம்- விக்கிரமராஜா

Published On 2018-12-13 11:26 GMT   |   Update On 2018-12-13 11:26 GMT
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை ரத்து செய்யாவிட்டால் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja

சென்னை:

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

50 மைக்ரான் எடைக்கு குறைவான பிளாஸ்டிக் பை, ஸ்டிரா, பேப்பர்களை விற்றாலோ பயன் படுத்தினாலோ அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இன்று சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு 1-ந்தேதி முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. எங்களை பொறுத்த வரை மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையில் இருந்து அரசு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் 2022-ல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களின் பிஸ்கட், சாக்லேட் போன்ற பல்வேறு பொருட்கள் பிளாஸ்டிகில் வருகிறது. அதற்கு அரசு தடை செய்யாமல் உள்நாட்டு நிறுவனங்களின் பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் அரசு தடை விதிப்பது பாரபட்சமாக உள்ளது.

எனவே தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை மறு பரிசீலினை செய்யாவிட்டால் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மூடாதே மூடாதே, பிளாஸ்டிக் தொழிலை மூடாதே, மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக்கை தடை செய்யாதே என்று கோ‌ஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, ராஜ்குமார், மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாவட்ட பொருளாளர் ஆர்.எம்.பழனியப்பன், செயலாளர் சுப்பிரமணி, நடராஜன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், அயனாவரம் கே.ஏ.மாரியப்பன், கொளத்தூர் ரவி, அருணா சலமூர்த்தி, ஜெயராமன், ரமேஷ், ஜெயக்குமார், பழம்பொருள் அணி தலைவர் பூவை ஜெயக்குமார், துணைத் தலைவர் சரவணகுமார், அம்பத்தூர் ஹாஜி முகம்மது மேல ஜெயதேவ் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். #vikramaraja

Tags:    

Similar News