ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முழு அலங்காரத்துடன் மூலவர் ரெங்கநாதர் திருவடி தரிசனம்

Published On 2020-10-17 04:04 GMT   |   Update On 2020-10-17 04:04 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முழு அலங்காரத்துடன் மூலவர் ரெங்கநாதர் திருவடி சேவையை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து வருகிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மூலவர் ரெங்கநாதர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர்.

தைலக்காப்பிடும் நாட்களில் பெருமாளை அலங்கரித்திருக்கும் வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு திருவடி தொடங்கி திருமுடிவரை தைலம் பூசப்படும். இதனால் பெருமாளின் முகத்திற்கு கீழே திருவடி வரையுள்ள உள்ள பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும். ஒரு முறை தைலம் பூசினால் அது உலர்வதற்கு சுமார் 1 மண்டல காலம் (48 நாட்கள்) வரை ஆகும்.

இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதனை தொடர்ந்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தைலக்காப்பு உலர்ந்துவிட்டதை நேற்று முன் தினம் அர்ச்சகர்கள் உறுதி செய்து கோவில் நிர்வாகத்திற்கு முறைப்படி தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை வழக்கமான பூஜைகளுக்குப்பின் பெருமாள் திருமேனி மீது வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திருமேனியை மறைத்துக் கட்டப்பட்டிருந்த திரை அகற்றப்பட்டது. தற்போது மூலவர் ரெங்கநாதரை முழு அலங்காரத்துடன் திருவடி சேவையுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News