செய்திகள்
மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)

காலை, மாலையில் மெட்ரோ ரெயிலில் நிரம்பி வழியும் கூட்டம்

Published On 2019-11-02 06:39 GMT   |   Update On 2019-11-02 06:39 GMT
சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்யும் நிலையமாக திருமங்கலம் விளங்குகிறது.
சென்னை:

மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரெயில் நிலையங்களில் இருந்து இணைப்பு போக்குவரத்து வசதியாக ஆட்டோ, ஷேர் கார், சைக்கிள்கள் போன்ற வசதியினை செய்து கொடுத்து இருப்பதால் தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் தினமும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரெயிலில் காலை மற்றும் பீக்அவர்சில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 9 மணி முதல் 11 மணி வரையில் 22,204 பயணிகளும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை 37,601 பயணிகளும் செல்கின்றனர். காலை 11 மணி முதல் 12 மணி வரை மிக குறைந்த அளவில் 103 பேர் பயணித்து வருகின்றனர்.

32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்யும் நிலையமாக திருமங்கலம் விளங்குகிறது. இந்த நிலையம் எப்போதும் மிகவும் பிசியாக காணப்படுகிறது. தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். அதனை தொடர்ந்து சென்ட்ரல் நிலையமும், விமான நிலையமும் அடுத்தடுத்து இடத்தை பிடித்துள்ளது. சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து 9702 பேரும், விமான நிலையத்தில் இருந்து 7358 பேரும் பயணம் செய்கின்றனர்.

இது குறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயிலில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்பவர்கள்தான் பயன்படுத்துகின்றனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் பயணம் செய்யக்கூடியவர்களும் அதிகளவு செல்கின்றனர். திருமங்கலம் நிலையத்தை தான் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். பாடி, முகப்பேர், ரெட்டேரி, அம்பத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்வதற்காக வருகின்றனர். மெட்ரோ ரெயிலை தவிர ஆட்டோ, கால் டாக்சியில் அவர்கள் பயணம் செய்தால் அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்பதால் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துகின்றனர்.

திருமங்கலத்தில் இருந்து காலை 9 மணி முதல் 11 மணி வரையில் 2784 பேரும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையில் 2034 பேரும் பயணம் செய்கின்றனர். அடுத்ததாக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சமீபத்தில் ஷேர் கார் வசதி செய்யப்பட்டு இருப்பதால் தலைமை செயலகத்தில் வேலை செய்யக்கூடியவர்கள் அதிகளவு பயன்படுத்துகிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு பல்வேறு புறநகர் பகுதியில் இருந்து மக்கள் அதிகளவு வருவதால் அவர்கள் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை 1039 பயணிகள் பயன்படுத்துகின்றனர். இங்கு இணைப்பு போக்குவரத்து வசதி செய்து கொடுத்த பிறகு பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.

விமான நிலையத்தை பொறுத்தவரையில் நள்ளிரவு, அதிகாலையில் அதிகளவு பயணிகள் வருகின்றனர். இதனை கணக்கிட்டு மெட்ரோ ரெயில் சர்வீஸ் அதிகரிக்க பரிசீலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News