செய்திகள்
மூதாட்டிகளிடம் வருவாய் அலுவலர் சதீஷ்குமார் விசாரணை நடத்தினர்.

பழைய ரூபாய் நோட்டுடன் தவித்த 2 மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு

Published On 2019-11-29 05:25 GMT   |   Update On 2019-11-29 05:25 GMT
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் (வயது 82). இவரது சகோதரி காளிமுத்து ரங்கம்மாள் (77)

இவர்கள் மதிப்புழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளாக தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.46 ஆயிரத்தை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எங்களுக்கு தெரியாது. எங்களின் சேமிப்பு பணம் என்பதால் மிகவும் பத்திரமாக பாதுகாத்து மருத்துவ செலவுக்காக யாரையும் நம்பாமல் கடைசி கையிருப்பாக வீட்டில் வைத்து இருந்தோம். அதுவும் தற்போது வீணாகிவிட்டது. எங்கள் இருவரின் உடல் நிலை கருதி செல்லாத இந்த நோட்டுகளை அரசு மாற்றி தர வேண்டும் என கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் மற்றும் வி.ஏ.ஓ கோபி ஆகியோர் 2 மூதாட்டிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பணம் இருப்பது தெரிந்தால் மகன்கள் செலவு செய்து விடுவார்கள் என்பதால் யாருக்கும் தெரியாமல் சேமித்து வைத்து இருந்ததாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து வருவாய் அதிகாரிகள் சகோதரிகளின் வங்கி கணக்கு, ஆதார் அட்டை ஆகியவற்றை பெற்று முதல்கட்டமாக இருவருக்கும் முதியோர் உதவி தொகை மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை அறிக்கையை கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் இன்று வழங்குகின்றனர்.
Tags:    

Similar News