செய்திகள்
உப்பு உற்பத்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On 2021-06-08 08:26 GMT   |   Update On 2021-06-08 08:26 GMT
கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தொடர்ந்து 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
முள்ளக்காடு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தொடங்கி நவம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும்.

வழக்கம்போல இந்த ஆண்டும் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடற்கரையோர பகுதிகளான தூத்துக்குடி, வேப்பலோடை, முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல், ஆறுமுகநேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கொரோனா காலத்திலும் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சீரான இடைவெளியில் மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மழை காரணமாக பெருமளவு முதலீடுகள் வீணாகி விட்டதாக உரிமையாளர்களும், வேலைவாய்ப்பை இழந்துவிட்டதாக தொழிலாளர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பழைய காயலில் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் சுடலைமணி கூறியதாவது:-

இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. போதிய விலை இருந்தும் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தொடர்ந்து 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News