ஆன்மிகம்
அம்மனுக்கு படையலிட கைக்குத்தல் பச்சரிசி சாதம் உருண்டை தயாரானபோது எடுத்தபடம்.

கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் கிடாய்கள் வெட்டி அசைவ விருந்து

Published On 2021-10-04 02:30 GMT   |   Update On 2021-10-04 02:30 GMT
ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வந்து எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனர்.
கமுதி :

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல்நாடு கிராமத்தின் கண்மாய் கரையில், எல்லைப்பிடாரி அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் நடைபெற்று வருகிறது. கோவில் திருவிழா என்றாலே பெண்கள் பொங்கல் வைப்பதும், முளைப்பாரி சுமந்து செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஆனால் முன்னொரு காலத்தில் பெண்களால் துன்புறுத்திக்கொலை செய்யப்பட்டதால் எல்லைப்பிடாரி அம்மன் பெண்களை வெறுத்தாராம். இந்தநிலையில் எல்லைப்பிடாரி அம்மன் முதல்நாடு கிராம மக்களின் கனவில் வந்து தங்கள் ஊர் எல்லையில் காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றுவேன் என்றும், தன்னை ஆண்கள் மட்டும் வருடத்திற்கு, ஒரு முறை கிடாய்களை வெட்டி பலி கொடுத்து வழிபடவேண்டும், மேலும் சாமி கும்பிடும் நேரத்தில் அப்பகுதிக்கு பெண்கள் வரக்கூடாது என கூறியதால் வருடம் ஒரு முறை, இந்த ஆண்கள் பங்கேற்கும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து ஒரு வார காலம் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை. இந்த திருவிழாவுக்காக முதல்நாடு கிராம ஆண்கள் மட்டும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஒன்று கூடி கால்படாதவாறு மண் எடுத்து பீடம் அமைத்தனர்.



பின்னர் நேற்று காலை, மாலை அணிவித்து பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, கைக்குத்தல் அரிசி சாதம் செய்து, செம்மறி கிடாய்கள் 47 பலியிட்டு கைகுத்தல் பச்சரிசி சாதம் உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு பூஜை செய்தனர்.

திருவிழாவிற்கு வருகை தந்த ஆண்கள் அனைவருக்கும், பச்சரிசி சாத உருண்டை மற்றும் கறி விருந்து பரிமாறப்பட்டது. இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்கக்கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வந்து எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனர்.

திருவிழாவில் கறி விருந்து என்றால் மது குடித்துவிட்டு கறி சாப்பிடுவது வழக்கம். ஆனால் இங்கு மது அருந்தி வந்தால் தண்டனை என்பதால் யாரும் மது அருந்துவது இல்லை.
Tags:    

Similar News