ஆன்மிகம்
பிடாரியார் இரணியம்மன்

பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவிழா: இன்று யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா

Published On 2021-02-21 05:49 GMT   |   Update On 2021-02-21 05:49 GMT
திருவானைக்காவல் பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யானை வாகனத்தில் அம்மன் புறப்பட்டு பல்வேறு முக்கிய வீதிகளில் வலம் வருவார்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் சார்பு கோவிலான, எல்லை காவல் தெய்வமான பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவானைக்காவல் ஊரின் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

மிகுந்த வரப்பிரசாதியான இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் மாசிமாதத்தில் ஒருவாரம் முழுவதும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.திருச்சி மாவட்டத்தில் இரணியம்மன் கோவில் திருவிழாவிற்கு பிறகுதான் மற்ற ஊர் கிராம தெய்வங்களுக்கு திருவிழாக்கள் நடைபெறும். இவ்விழாவிற்காக கடந்த 9-ந்தேதி முதல்காப்பும், 16-ந்தேதி இரண்டாம் காப்பும், 23-ந்தேதி 3-வது காப்பும் கட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து முதல்நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) யானை வாகனத்திலும், 2-வது நாள் குதிரை வாகனத்திலும், 3-வது நாள் பூதவாகனத்திலும் அம்மன் புறப்பட்டு பல்வேறு முக்கிய வீதிகளில் வலம் வருவார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24-ந்தேதி இரணியம்மன் பூந்தேரில் எழுந்தருளி 27-ந்தேதி வரை அனைத்து தெருக்களிலும் வீதியுலா வருவார்.

 அப்போது வழிநெடுக பக்தர்கள் ஆடுகள் பலியிட்டும், மாவிளக்கு வைத்தும் வழிபடுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தலைமையில், கோவில் அலுவலர்கள், உள்ளூர் பக்தர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News