செய்திகள்
பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர் சந்திப்பு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறையும்- மத்திய அரசு

Published On 2021-04-04 06:55 GMT   |   Update On 2021-04-04 06:55 GMT
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்காது என்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஏற்கனவே கூறியிருந்தார்.
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வந்தது. மார்ச் இறுதியில் விலை உயர்வு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், வரும் நாட்களில் எரிபொருள் விலை மேலும் குறையும் என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இப்போது குறைய தொடங்கியுள்ளன. வரும் நாட்களில் மேலும் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதால் கிடைக்கும் பயனை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்வோம் என நாங்கள் முன்னர் கூறியிருந்தோம்’ என்றார்.



நாடு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை 85 சதவீதம் சார்ந்துள்ளதால், சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் விலை நிர்வகிக்கப்படுவதாக பிரதான் முன்னர் கூறியிருந்தார்.

மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்காது என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுக் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும் நிதி தேவைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
Tags:    

Similar News