செய்திகள்
கனிமொழி

அதிமுக பிரசாரம் மக்களிடம் எடுபடாததால் டெல்லியில் இருந்து பிரசாரத்திற்கு வருகின்றனர் - கனிமொழி

Published On 2021-03-31 07:56 GMT   |   Update On 2021-03-31 07:56 GMT
தமிழகத்தில் அ.தி.மு.க. பிரசாரம் மக்களிடம் எதுவும் எடுபடவில்லை என்பதால் டெல்லியில் இருந்து பிரசாரத்திற்கு வருகிறார்கள் என கனிமொழி பிரசாரம் செய்தார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. திருப்புல்லாணியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மகிழ்ச்சியை, எழுச்சியை கூட்டத்தை பார்க்கும் போது தேர்தல் முடிந்து வெற்றி விழா கண்டது போல உணர்வு ஏற்பட்டுள்ளது.

நான் பேச வேண்டியதில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.

தமிழகத்தில் அ.தி.மு.க. பிரசாரம் மக்களிடம் எதுவும் எடுபடவில்லை என்பதால் டெல்லியில் இருந்து பிரசாரத்திற்கு வருகிறார்கள்.

பிரதமர் பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவுகிறது. அனைத்து தொகுதிகளிலும் நான்தான் நிற்கிறேன் என அவர் சொல்லியிருந்தால் தமிழக மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என தெரியும்.

தமிழ் மொழிக்கு எதிராக தமிழ் அடையாளங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு மருத்துவ மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது. நேற்று பிரதமர் பெண்கள் மீது அக்கறையோடு பேசியுள்ளார்.

மன்னிப்பு கேட்டு விட்டோம். தலைவர் ஸ்டாலின் அதை கண்டித்து விட்டார். நாங்கள் நேர்மையுள்ளவர்கள். நியாயமானவர்கள் என்பதால் தான் மன்னிப்பு கேட்டோம்.

ஹத்ராவில் கோவிலில் சிறுமியை அடைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். என்ன செய்தீர்கள்?

உபியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண். இந்த செயல் பெண்களை அவமதிக்கவில்லையா?

நீங்கள் பேசிய மேடையில் இருந்து 59 கிலோமீட்டர் தூரத்தில் பொள்ளச்சியில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை.

பெண்கள் குறித்து எச்.ராஜா பேசியதை கேட்க திராணி இல்லை, தைரியம் இல்லை. சொந்த கட்சி பேசினால் அது தவறில்லையா?

எங்களுக்கு திராணி, மனசாட்சி, நியாய உணர்வு இருந்ததால்தான் அதனை கண்டித்து மன்னிப்பு கேட்டோம்.

பொதுக்கூட்ட மேடையில் இரட்டை வேடம் போட்டுக்கொண்டு பேசியவர் பிரதமர். தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல பிரதமர் பேசினால் அதற்கு மயங்க தமிழர்கள் முட்டாள்கள் இல்லை.


காவல் நிலையத்தில் தேடும் லிஸ்ட்டில் உள்ள குற்றவாளிகளை தேடித் தேடி பா.ஜ.க.வில் 20 பேரை சேர்த்துள்ளனர்.

புயல் வெள்ள பாதிப்புக்கு மாநில அரசு 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டால் வெறும் 5 ஆயிரம் கோடிகொடுத்தார்கள். நீங்கள் அள்ளிக்கொடுக்க வேண்டாம் கிள்ளிக்கொடுக்க கூட மனமில்லாத அரசு மத்திய அரசு.

அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் அப்படியே உள்ளது. அப்பல்லோவில் ரூ. 1 கோடிக்கு ஒரு இட்லியை ஜெயலலிதா சாப்பிட்டது போல 12 கோடிக்கு ஒரு செங்கலை நட்டுள்ளனர்.சரியான பாடத்தை மக்கள் சொல்லித்தருவார்கள்.

மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வு காணப்படும். தமிழகம் தமிழர்களால் தமிழகத்தில் இருந்து ஆள வேண்டும் என நினைத்து வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News