செய்திகள்
மழை

சத்தியமங்கலத்தில் கொட்டிய பலத்த மழை

Published On 2019-11-07 11:03 GMT   |   Update On 2019-11-07 11:03 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறட்சி நிலையே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்த மழை 6 மணி வரை ஒரு மணி நேரம் கொட்டியது. இதனால் ரோட்டின் இருபுறமும் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இந்த திடீர் மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 1 மணி நேரம் பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான நிலை நிலவியது. மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் நீலகிரி மலையில் மழை நின்றதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 2293 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உள்ளது. (கொள்ளளவு 105 அடி).

அணையிலிருந்து வாய்க்கால்களுக்கு பாசனத்துக்கு வினாடிக்கு 2900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News