ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும்...

Published On 2021-12-16 05:40 GMT   |   Update On 2021-12-16 05:40 GMT
இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.
இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.

அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.

ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.

இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.

கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.

தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.

இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.

நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.

மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.

இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.

இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).

மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.

மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.

இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.

 - டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.  

Tags:    

Similar News