செய்திகள்
முகுல் சங்மா

மேகாலயாவில் அரசியல் பரபரப்பு: 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்

Published On 2021-11-25 07:29 GMT   |   Update On 2021-11-25 09:13 GMT
முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஷில்லாங்:

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக கன்ராட் சங்மா உள்ளார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மேகாலயா முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், தற்போதைய எம்.எல்.ஏ.மான முகுல் சங்மா காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் 12 எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.



12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று நள்ளிரவே முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இது மேகாலயா மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேகாலயா மாநில காங்கிரஸ் தலைவராக வின்சென்ட் எச்.பலா கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு தன்னிடம் ஆலோசிக்காததால் முகுல் சங்மா அதிருப்தி அடைந்தார்.

அவரை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் சமாதானப்படுத்தினார்கள். ஆனாலும் தொடர்ந்து முகுல் சங்மா அதிருப்தியிலேயே இருந்து வந்தார்.

இதற்கிடையே அவர் தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, எம்.எல்.ஏ.க்களின் முடிவை தொடர்ந்து மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது என்றார்.

ஒரு கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் 2 பங்கு பேர் வேறு கட்சியில் இணைவதை கட்சித் தாவல் தடை சட்டம் அனுமதிக்கிறது. எனவே திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News