செய்திகள்
கோப்புபடம்

கொரோனா 2-வது அலையால் பாதிப்பு - இந்தியாவுக்கு 40 நாடுகள் உதவி

Published On 2021-04-30 07:33 GMT   |   Update On 2021-04-30 07:33 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.

இந்தநிலையில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் தீவிர கொரோனா பரவல் காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க 40-க்கும் மேற்பட்ட நாடுகள் முன் வந்துள்ளன.

இதன்படி 550 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், 4 ஆயிரம் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் மற்றும் 10 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஏராளமான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 2 சிறப்பு விமானங்கள் அமெரிக்காவில் இருந்து இன்று வருகிறது. மேலும் எகிப்தில் இருந்து 4 லட்சம் ரெம்டெசிவிர் மருந்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதே மருந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் பெற முயற்சி மேற்கொள்ளபடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியபோது கொரோனா சவாலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் உதவுவோம் என்று அதிபர் புதின் உறுதி அளித்தார்.


இந்தநிலையில் ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்து மோடியும், புதினும் ஆலோசித்தனர். இந்தியாவில் 85 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் உற்பத்தி தொடங்கும். அதற்கு முன்பாக மே 1-ந்தேதி ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘பெவிபிர்ராவிர்’ மருந்து நல்ல பலன் அளிக்கிறது.

இந்த மருந்துகளை இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளோம். ரஷியாவில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களையும் அனுப்பி உள்ளோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி கடந்த 26-ந்தேதி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது.

அதற்கு பிரதிபலனாக அமெரிக்கா சார்பில் இந்தியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். 1100 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1700 ஆக்சிஜன் கான்சன்ட் ரேட்டர்கள், கொரோனா தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சார்பில் 440 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 9.6 லட்சம் பரிசோதனை கருவிகள், 1 லட்சம் என்95 முககவசங்கள் உள்ளிட்டவை விமானம் மூலம் இந்தியாவுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News