ஆன்மிகம்
இயேசு

பிதாவாகிய தேவனின் அன்பு

Published On 2020-02-27 04:24 GMT   |   Update On 2020-02-27 04:24 GMT
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைக் காணும்போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது விளங்கப்பண்ணின அவரது அன்பையும் நாம் காண இயலும்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைக் காணும்போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது விளங்கப்பண்ணின அவரது அன்பையும் நாம் காண இயலும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். ஆதாமின் பாவத்தின் மூலம் அடிமைப்பட்டுப்போன முழு மனுக்குலத்தின் மீட்பிற்காக தேவன் தம்முடைய சொந்தக் குமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக்கொடுத்து அவருடைய மரணத்தின் மூலம் உலகை மீட்பதே பிதாவின் மீட்பின் திட்டம். தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல் நமக்காக இயேசுவை சிலுவையில் அறையும்படி பிதாவாகிய தேவன் ஒப்புக்கொடுத்ததே அவரது அன்பு ஆகும். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்(ரோ:5:7,8)என்று வேதம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது.

பழைய ஏற்பாட்டுக் காலத்திலே நியாயப்பிரமாணம் பாவம் செய்தவர்களிடத்தில் அன்பையோ, இரக்கத்தையோ காண்பிக்கவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்த மனுக்குலத்திற்கு எவ்வித இரக்கமும் பாராட்டாமல் கடுமையான தண்டனையும், தேவ கோபாக்கினையும் மட்டுமே அந்நாட்களில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களைப்பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார். கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் மத்தியிலும், தேவாலயத்திலும் பிரசங்கித்தார். பாவத்திலே வாழ்ந்து தங்களுக்கு மீட்பே இல்லையா என ஏங்கித் தவித்த முழு மனுக்குலத்துக்காகவும் தம் அன்பை வெளிப்படுத்த கல்வாரி சிலுவையிலே ஜீவனையும் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

முழு உலகமும் கிறிஸ்துவானவர் தம் அன்பால் சிந்தின ரத்தத்தினாலே மீட்பைப் பெற்றது. பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே:2:8) நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்(1 யோ:3:16) என்று வேதம் கூறுகிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உலகிலே வெளிப்படுத்துவோம். நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்று வேதம் அனைவருக்கும் இந்தக் கிருபையைப்பெற்றுக்கொள்ள அழைப்புக்கொடுக்கிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம். தேவனுக்குரியவர்களாய் வாழ்வோம்.

போதகர்.அமல்ராஜ்,பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை, மண்ணரை,திருப்பூர்.
Tags:    

Similar News