செய்திகள்
வெங்கையா நாயுடுவுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு

பெகாசஸ், வேளாண் சட்டங்கள் விவகாரம்... வெங்கையா நாயுடுவுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு

Published On 2021-08-12 09:07 GMT   |   Update On 2021-08-12 09:07 GMT
மாநிலங்களவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கம் முதலே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனைகனை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டுவந்தனர். இதனால் 2 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டத்தொடர் முடித்துக்கொள்ளப்பட்டது. 

நேற்று முன்தினம் மாநிலங்களவைக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மிகவும் கடுமையாக நடந்துகொண்டனர். மேசைகள் மீது ஏறியும், புத்தகங்கள், அறிக்கைகளைக் கிழித்து எறிந்தும் அமளியில் ஈடுபட்டதால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி அடைந்தார். 

மாநிலங்களவையில் அங்கேறிய சம்பவங்களால் தான் மிகவும் வேதனை அடைந்தாக கண்ணீர்மல்கத் தெரிவித்தார் வெங்கையா நாயுடு. மாநிலங்களவையின் மாண்பைக் காக்க எம்.பி.க்கள் தவறிவிட்டனர். இதனால் நான் அடைந்த வேதனையை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லை. இரவெல்லாம் தூக்கம் இல்லை, எனக் கண்ணீரோடு அவர் தெரிவித்தார். 



இந்நிலையில், மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி பேரணி சென்றனர். பேரணிக்கு ராகுல்காந்தி தலைமை தாங்கினார். 

அதன்பின்னர் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். மேலும் மாநிலங்களவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர். 

இத்தகவலை காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். மேலும், விவாதம் எதுவும் இன்றி பல்வேறு மசோதாக்களை அரசு நிறைவேற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News