செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்

Published On 2021-04-11 03:53 GMT   |   Update On 2021-04-11 08:13 GMT
கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

தமிழக சட்டசபைக்கு கடந்த 6-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் தி.முக. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எஸ்.டபிள்யு.மாதவராவ் (வயது64) போட்டியிட்டார்.

இவர் கடந்த மாதம் 17-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 3 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

கடுமையான சளி, காய்ச்சலால் அவதிப்பட்ட மாதவராவ் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவருக்கு நுரையீரல் தொற்று தீவிரமானது. இதனால் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. உடனே அவர் நேற்று அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானது.

அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனாலும் மாதவராவ் இன்று காலை சுமார் 8 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மரணம் அடைந்த மாதவராவுக்கு டாக்டர் சீத்தாலட்சுமி என்ற மனைவியும், திவ்யா (25) என்ற மகளும் உள்ளனர். மனைவி சீத்தாலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மகள் திவ்யாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

மாதவராவ் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள அய்யம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரமும், சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். படிப்பும் படித்துள்ளார். மேலும் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். மேலும் அவர் விளையாட்டிலும் சிறந்த வீரராக திகழ்ந்து வந்தார். தடகளம், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் சென்னை அம்பத்தூரில் குடும்பத்துடன் குடியேறினார். சென்னையில் கியாஸ் ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பங்க்குகள் நடத்தி வந்தார்.



சிறு வயதில் இருந்தே மாதவராவ் காங்கிரஸ் கட்சி மீது தீவிர பற்றுடன் இருந்தார். மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் அருணாசலம், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருடன் நெருங்கிய நட்புடன் இருந்து வந்தார்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளராகவும், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பதவி உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

தேர்தலில் நிற்பது இவரது நீண்டநாள் கனவாகும். பலமுறை இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கட்சி மேலிடத்தில் விருப்ப மனு கொடுத்தார். மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தென்காசி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். அவருக்கு முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என மாதவராவ் நினைத்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவை அறியாமல் அவர் மரணம் அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மரணம் அடைந்த மாதவராவ் உடல் இன்று ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படுமா? அல்லது சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுமா? என்பது பற்றி முடிவு செய்யப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News