செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு - பஞ்சாப்பில் நாளை முதல் ரெயில்கள் இயக்கம்

Published On 2020-11-22 01:00 GMT   |   Update On 2020-11-22 01:00 GMT
முதல் மந்திரியுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, பஞ்சாப்பில் நாளை முதல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சண்டிகர்:

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் ரெயில் தண்டவாளங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதியில் இருந்து நடந்து வந்த இந்த போராட்டங்களால் அங்கு சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் ரெயில்வேக்கு ரூ.2,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சரக்கு ரெயில்களை மட்டுமே அனுமதிக்க முதலில் விவசாயிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதை ஏற்க ரெயில்வே மறுத்துவிட்டது.

இந்நிலையில், விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களை முதல் மந்திரி அமரிந்தர் சிங் நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பயணிகள் ரெயில்களை 15 நாட்கள் இயக்குவதற்கு விவசாயிகள் தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.

இதையொட்டி முதல் மந்திரி அமரிந்தர் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், விவசாயிகள் சங்கத்தினருடன் நடத்திய சந்திப்பு பயனுள்ள விதத்தில் அமைந்தது. 23-ம் தேதி இரவில் இருந்து 15 நாட்களுக்கு ரெயில் தண்டவாள முற்றுகை போராட்டங்களை நிறுத்தி வைக்க விவசாயிகள்கள் சங்கங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இது இயல்பு நிலையை திரும்ப கொண்டு வரும் என்பதால் வரவேற்கிறேன். பஞ்சாப்பில் ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நாளை முதல் பஞ்சாப்பில் பயணிகள், சரக்கு ரெயில்கள் இயங்கும். தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் ரெயில் தண்டவாளங்களை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
Tags:    

Similar News