லைஃப்ஸ்டைல்
தேங்காய் பால் பட்டாணி புலாவ்

வயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய் பால் பட்டாணி புலாவ்

Published On 2021-01-22 09:36 GMT   |   Update On 2021-01-22 09:36 GMT
உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம். இன்று தேங்காய் பால் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்,
தேங்காய் - அரை மூடி
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
பச்சை பட்டாணி - அரை கப்
இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,
பட்டை - 3,
லவங்கம் - 5,
ஏலக்காய் - 3,
பிரியாணி இலை - 2,
கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,
முந்திரி - 50 கிராம்,
நெய் - 100 கிராம்,
புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.

அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.

ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை பட்டாணி, தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.

கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

இதனுடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News