ஆன்மிகம்
கிருஷ்ணன்

கீர்த்தியைத் தரும் கிருஷ்ணன் கோவில்கள்

Published On 2021-08-31 05:07 GMT   |   Update On 2021-08-31 09:28 GMT
மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்திற்கும் நாடு முழுவதும் பல திருக்கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணனுக்காக அமைந்த சில கோவில்களைப் பார்ப்போம்.
மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு, நாடு முழுவதும் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவரது அவதாரங்க ளாக இருக்கும், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் பரவலாக ஆலயங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதே போல் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்திற்கும் நாடு முழுவதும் பல திருக்கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணனுக்காக அமைந்த சில கோவில்களைப் பார்ப்போம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மயிலாடி என்ற ஊரில் கிருஷ்ணன் கோவில் ஒன்று உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஆலயத்தில் இருக்கும் மூலவர் விக்கிரகம், சுயம்புவாக தோன்றியது. இந்த கிருஷ்ணருக்கு, அவல், பால், வெண்ணெய், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம் வேண்டி இங்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மேலும் குடும்ப ஒற்றுமைக்காகவும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவன் நல்வழி காட்டுவதாக பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மதுரை நவநீத கிருஷ்ணன்

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ளது, நவநீத கிருஷ்ணன் கோவில். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயம் இது. மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வடக்கு கோபுர திசையில் இருப்பதால் ‘வடக்கு கிருஷ்ணன் கோவில்’ என்றும், ஆரம்பத்தில் கம்பத்தின் கீழ் வீற்றிருந்ததால் ‘கம்பத்தடி கிருஷ்ணன் கோவில்’ என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய கோலத்தில் அருள்கிறார். அருகில் சத்தியபாமா, ருக்மணி தாயார் வீற்றிருக்கின்றனர். கேரளாவில் உள்ள குருவாயூரப்பனுக்கு வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை, அங்கு செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் செலுத்தினாலே போதும் என்கிறார்கள்.

கோகுல கிருஷ்ணன்

திருச்சியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவானைக்காவல் திருத்தலம். இங்கு கோகுலகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவனை வேணுகோபால சுவாமி என்றும் அழைக்கிறார்கள். 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறது. கருவறையில் கையில் புல்லாங்குழலுடன் ஒரு காலை மடக்கி வைத்தபடி நின்ற கோலத்தில் கோகுல கிருஷ்ணன் காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும், ருக்மணி மற்றும் சத்தியபாமா இருக்கிறார்கள். திருமணத்தடை நீங்க இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். தவிர குழந்தைப்பேறு வேண்டியும் வழிபாடு செய்கிறார்கள்.

தொட்டிலில் தூங்கும் கிருஷ்ணர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது, வடசேரி. இதன் அருகே கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கிருஷ்ணன் கோவிலை அடிப்படையாக வைத்துதான், இந்த ஊரும் அதே பெயரில் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்மன் என்ற மன்னனால், இந்த ஆலயம் கட்டப்பட்டதாக, கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு மூலவரான பாலகிருஷ்ணன், குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்கிறார். இரு கரங்களிலும் வெண்ணெயை ஏந்தி நிற்கும் இவரை, இரவு நேர பூஜையின் போது, வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் வைபவம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக பாலகிருஷ்ணனுக்கு படைக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் நைவேத்திய பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது. இத்தல இறைவனை தொடர்ச்சியாக மூன்று அஷ்டமி தினங்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாளில் வணங்கி வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுயம்பு மூர்த்தி
Tags:    

Similar News