செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகல் - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Published On 2018-03-07 17:59 GMT   |   Update On 2018-03-07 18:22 GMT
மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விஜயவாடா:

ஆந்திரா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.

இதற்கிடையே, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இதற்காக டெல்லிக்கு சுமார் 25 தடவை சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

நேற்று முன்தினம், ஆந்திர மாநில அரசுக்கு சிறப்பு அந்தஸ்து தர இயலாது என்று மத்திய நிதி அமைச்சகம் சூசகமாக தெரிவித்தது. சிறப்பு அந்தஸ்துக்கு பதில் சிறப்பு நிதித் திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த முடிவு சந்திரபாபு நாயுடுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,  ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு இன்றிரவு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரும் விவகாரத்தில் மனக்கசப்பு காரணமாக விலகுகிறோம். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மந்திரிகள் ஒய்.எஸ்.சவுத்ரி மற்றும் அசோக் கஜபதி ராஜு நாளை ராஜினாமா செய்ய உள்ளனர் என தெரிவித்தார். #ChandrababuNaidu #TDP
Tags:    

Similar News