செய்திகள்
போராட்டம் நடத்திய பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து போராட்டம் - பரூக் அப்துல்லா மகள், சகோதரி கைது

Published On 2019-10-15 11:16 GMT   |   Update On 2019-10-15 11:16 GMT
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பரூக் அப்துல்லாவின் சகோதரி உள்பட 10-க்கும் அதிகமான பெண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்து அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 72 நாட்களாக தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காஷ்மீரில் 72 நாட்களுக்கு பிறகு முடக்கப்பட்ட தொலைபேசி நேற்று மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. மேலும், தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி) உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மீண்டும் துவங்கியுள்ளது.



இந்நிலையில், ஸ்ரீநகரின் பிரதாப் பூங்கா அருகே இன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா மகள் சபியா உள்பட 10-க்கும் அதிகமான பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை காஷ்மீருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பரூக் அப்துல்லாவின் சகோதரி உள்பட அனைவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
Tags:    

Similar News