செய்திகள்
கைதானவர்களை படத்தில் காணலாம்.

இளம்பெண்ணின் போட்டோவை முகநூலில் பதிவிட்டு வாலிபரிடம் ரூ.3 லட்சம் பறித்த 3 பேர் கைது

Published On 2020-11-13 10:46 GMT   |   Update On 2020-11-13 10:46 GMT
இளம்பெண்ணின் போட்டோவை முகநூலில் பதிவிட்டு வாலிபரிடம் ரூ.3 லட்சம் பறித்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி மேட்டு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 34). இவர், தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி அனுசுயா(29). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவனின் வருமானம் குறைவாக உள்ளதால் கூடுதலாக பணம் சம்பாதிக்க அனுசுயா முடிவு செய்தார்.

இதனையடுத்து அனுசுயா அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை அழைத்து அவரை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்து அந்த பெண்ணின் போட்டோவையும், தொடர்பு எண்ணையும் முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த திருச்சியை சேர்ந்த ஒரு வாலிபர், அனுசுயாவை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அந்த வாலிபரிடம் அனுசுயா, போட்டோவில் உள்ள அந்த பெண், தான்தான் என்று ஆசை வார்த்தை கூறி அந்த வாலிபரிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக ரூ.3 லட்சம் வரையில் பெற்றுள்ளார். தொடர்ந்து பணம் கொடுத்து வந்த அந்த வாலிபருக்கு ஒருகட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வாலிபர், அனுசுயாவிடம் பேசி முகவரியை கேட்டு வாங்கிக்கொண்டு திருச்சியில் இருந்து பாமணிக்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர் அனுசுயாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். தான் போட்டோவில் பார்த்த பெண் வேறு, தன்னிடம் பேசிய பெண் வேறு என்பது அப்போதுதான் அவருக்கு தெரிய வந்தது.

வேறு ஒரு பெண்ணின் போட்டோவை காட்டி தன்னிடம் அனுசுயா பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து தான் ஏமாந்து விட்டோம் என்பதை புரிந்து கொண்ட அவர் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தனக்குத்தான் அவமானம் என நினைத்து அவர் வேறு வழியின்றி திருச்சிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் தந்தை, தனது மகளின் போட்டோவை தவறாக காட்டி பணம் பறித்த அனுசுயா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் இனியா, ஏட்டு ராஜம் ஆகியோர், பண மோசடியில் ஈடுபட்ட அனுசுயாவையும் அவருக்கு உதவியாக இருந்த அவருடைய கணவர் அய்யப்பன், அனுசுயாவின் சகோதரர் கவிதன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இளம்பெண்ணின் போட்டோவை முகநூலில் பதிவிட்டு வாலிபரிடம் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News