உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Published On 2022-04-17 06:29 GMT   |   Update On 2022-04-17 06:29 GMT
சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பீட்ரூட் ரகங்கள் பலவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு லாபகரமான பயிராக பீட்ரூட் மாறியுள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, வெங்காயம், கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால் பல வேளைகளில் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையே உள்ளது. 

இதனால் தற்போது மலைப்பிரதேச பயிர்களான பீட்ரூட், முள்ளங்கி, காலிபிளவர், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பீட்ரூட் ரகங்கள் பலவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு லாபகரமான பயிராக பீட்ரூட் மாறியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

செம்மண், கரிசல் மண் உள்ளிட்ட அனைத்து வகையான மண்ணிலும் பீட்ரூட் பயிரிட முடிகிறது. அத்துடன் நன்னீர் மட்டுமல்லாமல் உப்பு நீரிலும் சிறந்த மகசூல் தரக்கூடியதாக பீட்ரூட் உள்ளது. இதனால் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் பலரும் பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். 

பீட்ரூட் சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 100 நாட்களில் அறுவடைக்கு  தயாராகி விடும். விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள தற்போதைய சூழலில் களையெடுத்தல், அறுவடை போன்ற சமயங்களில் மட்டும் ஆட்கள் அதிக அளவில் தேவைப்படும்.

இதனால் பீட்ரூட் சாகுபடியில் ஆட்கள் பற்றாக்குறை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தற்போது பீட்ரூட் செடிக்கு களை எடுக்கும் பணி நடக்கிறது.

அத்துடன் சந்தைப்படுத்துதல் எளிதாக உள்ளது. மொத்த வியாபாரிகள் நேரடியாக விளை நிலங்களுக்கே வந்து அறுவடை செய்த பீட்ரூட்டை வாங்கிச் செல்கிறார்கள். தற்போதைய நிலையில் பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தாத பயிராக பீட்ரூட் உள்ளதால் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
Tags:    

Similar News