செய்திகள்
கனிமொழி

மக்களின் எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை - திமுக எம்.பி. கனிமொழி

Published On 2021-03-18 00:02 GMT   |   Update On 2021-03-18 00:02 GMT
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மக்களின் எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கீதாஜீவன், தொடர்ந்து மக்களுக்கு பணிகளை செய்து கொண்டிருக்கக் கூடியவர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்கள் அழைக்கும் போதெல்லாம் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கக்கூடிய மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். நிச்சயமாக அவர் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தேர்தலிலும் வெற்றி பெறுவார்.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பணியாற்றி வருகிறார். ஆனால், மக்களின் எந்த கோரிக்கைகளையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை.

செல்போன் கொடுப்பதாக கூறினார்கள். அதனை கொடுத்திருந்தால் கூட ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகள் பயன்படுத்தி இருப்பார்கள். தமிழகத்தில் ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருக்கும்போது எதையும் செய்யாமல், கடன் சுமையை மட்டுமே அதிகரித்து வைத்துள்ளனர். நிச்சயமாக மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்த வாக்குறுதிகளையும் அ.தி.மு.க.வினர் நிறைவேற்ற மாட்டார்கள்.

ஆனால், தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து கொண்டிருப்பவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான். அவர் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவார். தமிழகத்தில் நிச்சயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News