ஆன்மிகம்
தன்னைத்தானே பூஜித்த இறைவனின் அலங்காரம்

மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா: தன்னைத்தானே பூஜித்த இறைவனின் அலங்காரம்

Published On 2020-10-20 06:45 GMT   |   Update On 2020-10-20 06:45 GMT
சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்தது பற்றிய சிறப்பை பக்தர்கள் அறியும் வண்ணம், இந்த அலங்காரம் நவராத்திரி விழாவில் இடம்பெறுகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.

விழாவையொட்டி அம்மன் மற்றும் சுவாமி சன்னதி மற்றும் கொலுசாவடி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு திரை போட்டு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பட்டர்கள் கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை செய்தனர்.

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். அதன்படி நேற்று சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த அலங்காரம் குறித்து பட்டர் கூறும் போது, “போரில் வென்ற சிவபெருமான் மீனாட்சி அம்மனை மணந்து பாண்டிய மன்னராக பதவி முடிசூட்டிக் கொண்டார். மன்னராக பதவி ஏற்பவர்கள் சிவபெருமானின் வடிமான சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதனை பூஜை செய்வது வழக்கம். அதே போன்று இறைவனே பாண்டிய மன்னராக பதவி ஏற்ற போது சிவலிங்கத்தை உருவாக்கி அதனை பூஜை செய்த பிறகுதான் பதவி ஏற்றார்.

சிவபெருமான் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட இடம் தான் தற்போதுள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவில். எனவே தான் ஆவணி மாதம் பட்டாபிஷேகம் அன்று சுவாமி, நன்மை தருவார் கோவிலுக்கு சென்று வந்த பிறகுதான் அவருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்தது பற்றிய சிறப்பை பக்தர்கள் அறியும் வண்ணம், இந்த அலங்காரம் நவராத்திரி விழாவில் இடம்பெறுகிறது” என்று விளக்கம் அளித்தார்.
Tags:    

Similar News