செய்திகள்
கோப்புபடம்

ஜி.எஸ்.டி.,வரி உயர்வால் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பணப்புழக்கம் பாதிக்கும் - கருத்தரங்கில் தகவல்

Published On 2021-11-23 09:09 GMT   |   Update On 2021-11-23 09:09 GMT
அனைத்து ஆயத்த ஆடைகள் மற்றும் டையிங், பிரின்டிங் ஜாப்ஒர்க் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி., முறையில் புதுமைகள் மற்றும் சவால்கள் குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

சென்னை வக்கீல் நடராஜன் பேசியதாவது:

அனைத்து ஆயத்த ஆடைகள் மற்றும் டையிங், பிரின்டிங் ஜாப்ஒர்க் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிட்டிங் உட்பட இதர ஜாப்ஒர்க் சேவைகளுக்கான வரி 5 சதவீதமாக மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி விகிதம் உயர்வால் டையிங், பிரின்டிங் நிறுவனங்கள் உள்ளீட்டு வரியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். வரி விகித உயர்வால் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பணப்புழக்கம் பாதிக்கப்படும். இது தவிர்க்க முடியாதது. 

அதேபோல் நுகர்வோரும் அதிக விலை கொடுத்து ஆடை வாங்கவேண்டியது வரும். ஜி.எஸ்.டி.,க்கு முன்பு வரை சுங்கம் மற்றும் கலால் வரியில், ‘அரியர்’ என குறிப்பிட்டு ரிட்டர்ன் தாக்கல் செய்யயும் நடைமுறை இருந்தது. ஜி.எஸ்.டி.,ல், வரியை முழுமையாக செலுத்தினால் மட்டுமே, ரிட்டர்ன் தாக்கல் செய்யமுடியும்.

நிதி நெருக்கடிகளால் வரி செலுத்த முடியாத பல வர்த்தகர்கள், ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தாமத கட்டணம், வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலை தொடர்கிறது. ஜி.எஸ்.டி., போர்ட்டலில் ‘அரியர்’ என குறிப்பிட்டு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும். 

இதன் மூலம் வர்த்தகர்கள், தாமதமின்றி ரிட்டர்ன் தாக்கல் செய்வர். வர்த்தகர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளும் தவிர்க்கப்படும். சரக்கு கொண்டு செல்லும் வாகனங்களை வணிக வரித்துறை அமலாக்க அதிகாரிகள் ஆங்காங்கே நிறுத்தி ஆவணங்களை பரிசோதிக்கின்றனர். 

ஒரே வாகனம் பல இடங்களில் நிறுத்தப்படுவதால் சரக்குகள் குறிப்பிட்ட இடத்தை சென்றடைவதில் வீண் காலதாமதம் ஏற்படுகிறது.

சிறிய அளவிலான தவறுகளுக்கு அபராத தொகை செலுத்திவிட்டு சரக்குகளை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். இதற்காக வணிக வரி இணை கமிஷனர், முதன்மை கூடுதல் கமிஷனர்கள் அடங்கிய அதிகாரிகளை கொண்டு 24 மணி நேரமும் இயங்கும் சேவை பிரிவு துவக்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
Tags:    

Similar News