செய்திகள்
சிவசேனா

சொற்ப நிவாரணம் அறிவித்து விவசாயிகளை பாஜக ஏமாற்றி விட்டது- சிவசேனா தாக்கு

Published On 2019-11-19 02:24 GMT   |   Update On 2019-11-19 02:24 GMT
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சொற்ப நிவாரணம் அறிவித்து பாரதீய ஜனதா ஏமாற்றி விட்டதாக சிவசேனா தாக்கி உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் அண்மையில் பருவம் தவறி பெய்த மழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அப்போதைய முதல்-மந்திரி ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்.

ஆனால் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. தற்போது மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நிவாரணம் அறிவித்தார்.

ஆனால் கவர்னர் அறிவித்து உள்ள நிவாரண தொகை போதுமானது அல்ல என சிவசேனா தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் பெரிய தொகையை நிவாரணமாக அறிவிப்பார் என மராட்டிய விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் இரண்டு ஹெக்டேருக்கும், தோட்டப்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் வீதம் இரண்டு ஹெக்டேருக்கும் வழங்கப்பட உள்ளது. இது மிகவும் குறைவு.

மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீலும் இது போதுமான தொகை அல்ல என ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் இதை கண்டித்து, விவசாயிகளின் பின்னால் நிற்க தைரியம் இருக்கிறதா? பாரதீய ஜனதா தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா சொற்ப நிவாரணம் அறிவித்து மராட்டிய விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்து விட்டது. பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் சேதத்தை மதிப்பீடு செய்ய மறுத்தால் விவசாயிகளின் நிலைமையை மேலும் மோசமாக்கும். ஏனெனில் அவர்கள் எந்த இழப்பீடும் பெற முடியாது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News