ஆன்மிகம்
பழனி கோவிலில் இன்று தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.

பழனி கோவிலில் இன்று தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-01-22 08:40 GMT   |   Update On 2021-01-22 08:40 GMT
பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
பழனி :

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வதுதான்.

அவ்வாறு வரும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தைப்பூசத்திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.35 மணிக்கு பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது கோவில் மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 27-ந் தேதி திருக்கல்யாணமும், 28-ந் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31-ந் தேதி வாணவேடிக்கையுடன், தெப்ப உற்சவம் மற்றும் கொடி இறக்கம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News