செய்திகள்
பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜாவிடம் நிலை கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்

பெரம்பலூர் தொகுதியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல்

Published On 2021-04-03 10:46 GMT   |   Update On 2021-04-03 10:46 GMT
பெரம்பலூர் தொகுதியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்தை தேர்தல் செலவின பார்வையாளர் பறிமுதல் செய்தார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் அரவிந்த் ஜி.தேசாய் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் முத்துகண்ணு, மெர்சி, புஷ்பா ஆகிய போலீசார் அடங்கிய தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் எக்ஸ் ரோடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்தவரிடம் செலவின பார்வையாளர் அரவிந்த் ஜி.தேசாய் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர், பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது.

மேலும் சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 80 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், அதனை பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜாவிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News