செய்திகள்
வி‌ஷம்

நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி- பணிச்சுமை காரணமா?

Published On 2021-10-27 07:09 GMT   |   Update On 2021-10-27 07:09 GMT
பணிச்சுமை காரணமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை டவுனை சேர்ந்தவர் பழனி (வயது55). இவர் நெல்லை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

நேற்று பணிக்கு சென்று திரும்பிய பழனி வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் வி‌ஷம் குடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

பழனியின் மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது ஒரே மகன் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

மனைவி இறந்ததில் இருந்து பழனி மிகவும் சோகத்துடன் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மேலும் யாரிடமும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் நேற்று மாநகர பகுதி முழுவதும் 4 சக்கர வாகனங்களில் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த பம்பர்களை அகற்றும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதில் ஈடுபட்டிருந்த பழனியிடம் அதிகளவு வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்குமாறு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News