செய்திகள்
கைது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு- சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதியை கைது செய்தது போலீஸ்

Published On 2021-11-03 10:17 GMT   |   Update On 2021-11-03 10:17 GMT
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீதிபதியிடம் விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் நகரில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளைக் கையாளும்  சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக சிறுவனை மிரட்டி நீதிபதியும், மேலும் 2 நபர்களும் துன்புறுத்தியதாக சிறுவரின் தாயார் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.  மேலும், சிறுவனை மிரட்டி ஆபாச படம் எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதன் அடிப்படையில், நீதிபதி ஜிதேந்திர சிங் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதை தொடர்ந்து நீதிபதி ஜிதேந்திர சிங்கை ராஜஸ்தான் ஐகோர்ட் உடனடியாக  சஸ்பெண்ட் செய்து உள்ளது. 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதி ஜிதேந்திர சிங்கை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு ஆஜரான நீதிபதியிடம், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 

விசாரணைக்கு பிறகு இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை பரத்பூர் எஸ்.பி. தேவேந்திர குமார் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீதிபதியிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News