செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அபாயம்

Published On 2021-10-12 09:07 GMT   |   Update On 2021-10-12 15:34 GMT
கேரள அரசு இதில் உடனடியாக தலையிட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசிகளை திரும்ப பெற வேண்டும் என்று கேரள தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசே இலவசமாக தடுப்பூசி செலுத்தி வருகிறது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்த கேரளாவிலும் சிறப்பு முகாம்கள் மூலம் அரசே தடுப்பூசி போட்டு வருகிறது. இதற்கிடையே மாநில அரசின் மருத்துவ சேவை கழகம் மூலமாக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அளிக்கப்பட்டது.

கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தபோது தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் சென்று கட்டணம் செலுத்தி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

தற்போது அரசு சார்பில் கிராமம் கிராமமாக இலவச தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் அரசின் இலவச முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோர் எண்ணிக்கை குறைந்தது.

 



இதனால் கேரள அரசின் மருத்துவ சேவை கழகத்திடம் பெற்ற கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் 50 சதவீத தனியார் ஆஸ்பத்திரிகளில் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இதனை தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தெரிவித்து உள்ளன.எனவே கேரள அரசு இதில் உடனடியாக தலையிட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசிகளை திரும்ப பெற வேண்டும் என்று கேரள தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இது தொடர்பாக கேரள தனியார் ஆஸ்பத்திரி சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஜோசப் பெனிவன் கூறியதாவது:-

அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்கும் வகையில் தனியார் ஆஸ்பத்திரிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தில் பங்கேற்றன. ஆனால் தற்போது பொது மக்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது.

இதனால் 50 சதவீத தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கோவிஷில்டு தடுப்பூசி 9 மாதமும்,கோவாக்சின் 6 மாதத்திலும் காலாவதியாகும். கேரள தனியார் ஆஸ்பத்திரிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியாகிவிடும்.

இதன்மூலம் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகங்களுக்கு நஷ்டம் ஏற்படும். மேலும் மக்களுக்கு பயன்பட வேண்டிய தடுப்பூசிகள் வீணாக வாய்ப்பு உள்ளது. எனவே தனியார் ஆஸ்பத்திரிகளிடம் இருப்பில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளை அரசே திரும்ப பெற்று அதனை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... இலவச தடுப்பூசிக்காகதான் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது- மத்திய மந்திரி விளக்கம்

Tags:    

Similar News