செய்திகள்
வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியாளர்கள்.

டெங்கு, வைரஸ் காய்ச்சலை தடுக்க திருப்பூர் மாநகர் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம் - வீடு வீடாக 400 பணியாளர்கள் ஆய்வு

Published On 2021-10-25 09:04 GMT   |   Update On 2021-10-25 09:04 GMT
மழையின் காரணமாக தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகரில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதன் காரணமாக  சாலைகளில் 22 வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் கட்டுமான பணி நடந்து வருகிறது. பல இடங்களில் உரிய வடிகால் வசதி இல்லை. பரவலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 

பல இடங்களிலும் கழிவுநீர், மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தன. சேறும் சகதியுமாக தேங்கிய தண்ணீரை வாளியை வைத்து இறைத்து வெளியே ஊற்றினர். இந்தநிலையில் மழையின் காரணமாக தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் கடந்த ஒரு மாதமாகவே டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்காக 4 மண்டலங்களிலும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள்  400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாநகர் பகுதியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று உரல் மற்றும் பல்வேறு பொருட்களில் தண்ணீர் ஏதும் தேங்கியுள்ளதா? என்று ஆய்வு செய்து வருவதுடன், டெங்கு பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகின்றனர். தெருக்கள், வீடுகளில் புகைமருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி பிரதீப் கூறுகையில்:

கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் 400 பேர் மாநகரில் வீடு வீடாக சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் பரிசோதனையும் நடத்தப்படுகிறது.

யாருக்காவது வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அந்த பகுதியில் காய்ச்சல் முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். இதேப்போல் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News