செய்திகள்
அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் மழையால் இடிந்த வீட்டை படத்தில் காணலாம்.

திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் விடிய விடிய மழை

Published On 2019-11-30 05:51 GMT   |   Update On 2019-11-30 05:51 GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.
திருச்சி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. பின்னர் சற்று வெறித்த நிலையில், நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.

திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை, துறையூர், லால்குடி, புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

சமயபுரம்-38.6, மேலணை- 16.2, புள்ளம்பாடி-30.6, நந்தியாறு-34.2, திருச்சி டவுன் -42, ஏர்போர்ட்-27.3, லால்குடி-40.8, மணப்பாறை-19.4, துவாக்குடி-39.4, பொன்னணியாறு அணை -18.6.

கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

கரூர்-8.3, அணைப்பாளையம்-8.2, க.பரமத்தி-5.6, குளித்தலை-4, கிருஷ்ணராயபுரம்-10, மாயனூர்-16, பஞ்சப்பட்டி-8, கடவூர்-15, பாலவிடுதி-24.1, மயிலம்பட்டி-8. மாவட்டம் முழுவதும் மொத்தம் 108.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழையின் காரணமாக காடுவெட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்த ஞானசேகர் (வயது 40), மணிகண்ணன் (38), கண்ணையன் (35), சம்பந்தம் (54) ஆகியோரின் குடிசை சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். அரியலூர் முடியங்குறிச்சியை சேர்ந்த சாமிக்கண்ணு மகள் பூங்கோதை (30), மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு பக்க சுவர் இடிந்து அவர்மீது விழுந்தது. இதில் பூங்கோதை இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-புதுவேட்டக்குடி-21, பெரம்பலூர்-8, எறையூர்-8. மாவட்டம் முழுவதும் மொத்தம் 48 மி. மீ. மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடை விடாமல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். மாவட்டத்திற்குட்பட்ட கறம்பக்குடி, திருமயம், அரிமளம், அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை, பொன்னமராவதி, மணமேல் குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
Tags:    

Similar News