செய்திகள்
கைது

திருமங்கலம் அருகே சிமெண்ட் வியாபாரி கொலை- 5 பேர் கைது

Published On 2020-09-24 08:05 GMT   |   Update On 2020-09-24 08:05 GMT
திருமங்கலம் அருகே சிமெண்ட் வியாபாரி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 67). இவர் அதே பகுதியில் சிமெண்ட் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 2 மகன்களும், மகள்களும் உள்ளனர்.

2வது மகன் சிவக்குமாருக்கும், அவரது அத்தை மகள் கலைச்செல்விக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கலைச்செல்வி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் இருவரையும் சேர்த்து வைக்க உறவினர்கள் முயற்சிகள் எடுத்தும் பலன் ஏற்படவில்லை.

இதற்கிடையில் சிவலிங்கம் தனது மகன் சிவகுமாருக்கு 2வது திருமணம் செய்து வைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வியின் சகோதரர் விஜயகுமார் (28), சிவலிங்கத்திடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

தனது சகோதரியின் வாழ்க்கை கேள்விக்குறியானதால் சிவலிங்கத்தை கொலை செய்ய விஜயகுமார் திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 15-ந் தேதி இரவு சிவகுமார், தனதுஉறவினர் செங்கதிரை (27) அழைத்துக்கொண்டு சிமெண்ட் கடைக்கு சென்றார்.

அப்போது அங்கு இருந்த சிவலிங்கத்திடம் தனது சகோதரியின் வாழ்க்கை குறித்து கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், செங்கதிர் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தை சரமாரியாக குத்தினர். இதை தடுக்க வந்த அவரது மனைவி சரோஜா, மகன் சிவகுமார், உறவினர் பழனி ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிவலிங்கம் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். மேலும் தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் விஜயகுமார், செங்கதிர் ஆகியோர் நிலக்கோட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அங்கு பதுங்யிருந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கருப்பையா, பன்னீர் செல்வம், ஆனந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

விஜயகுமாரின் சகோதரி கலைச்செல்வி, தாய் வனப்பேச்சி, உறவினர்கள் மூக்கு சாமி, மணி காளை, மருது, ராமன், ராஜா, கொடி வைரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News