செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி 30-ந் தேதி வாரணாசி செல்கிறார் - கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு

Published On 2020-11-24 00:35 GMT   |   Update On 2020-11-24 00:35 GMT
பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு 30-ந் தேதி செல்கிறார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு 30-ந் தேதி செல்கிறார். 8 மாதங்களுக்கு பிறகு அவர் அங்கு நேரில் செல்கிறார். தேவ் தீபாவளி பண்டிகை நாளில் அவர் வாரணாசிக்கு செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

முதலில், மிர்சாமுரத் என்ற இடத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்கிறார். பின்னர், டோம்ரி கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.

அங்கு கங்கை ஆற்றில் ராம்காட் படித்துறையில் இருந்து தசாஷ்மேத் காட் படித்துறைவரை படகில் செல்கிறார். அப்போது, தேவ் தீபாவளியையொட்டி, 84 படித்துறைகளில் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தபடி செல்கிறார்.

தசாஷ்மேத் காட் படித்துறையில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். பின்னர் மீண்டும் படகில் ஏறி, சாரநாத் செல்கிறார். அங்கு ஒலி, ஒளி காட்சியை பார்வையிடுகிறார். அன்று இரவு, டெல்லி திரும்புகிறார்.

பிரதமரின் நிகழ்ச்சிகளில், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
Tags:    

Similar News