செய்திகள்
கோப்புபடம்

புளியங்குடியில் டிராக்டர் மீது லாரி மோதல் - தொழிலாளி பலி

Published On 2021-06-11 17:37 GMT   |   Update On 2021-06-11 17:37 GMT
புளியங்குடியில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூர் நோக்கி செங்கல் லோடு ஏற்றுவதற்காக நேற்று அதிகாலை டிராக்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. டிராக்டரை புளியங்குடியை சேர்ந்த முனியாண்டி மகன் காட்டுராஜா (வயது 35) என்பவர் ஓட்டினார். மேலும் புளியங்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமி மகன் ராஜா (32) என்பவரும் டிராக்டரில் சென்றார்.

புளியங்குடி சிந்தாமணியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. அதன்பிறகும் லாரி நிற்காமல் ஓடி சாலையோரத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. டிராக்டர் அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது.

இதில் டிராக்டரில் இருந்த ராஜா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் டிராக்டர் டிரைவர் காட்டுராஜா, லாரி டிரைவர் வாசுதேவநல்லூரை சேர்ந்த மாடசாமி மகன் சிவா (26) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், புளியங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீ்ட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ராஜாவுக்கு கனகலட்சுமி (27) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

Similar News