செய்திகள்
சீரடி சாய்பாபா கோவில்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி - ஷீரடி சாய்பாபா கோவில் மூடல்

Published On 2021-04-05 22:55 GMT   |   Update On 2021-04-05 22:55 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது.
ஷீரடி:

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நோய் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு ஊரடங்கு மற்றும் பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் நேற்று இரவு முதல் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திர தாக்கரே கூறுகையில், கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலின் பக்தர்கள் தங்குமிடம் மற்றும் அன்னதான கூடமும் மூடப்பட்டு இருக்கும். இருப்பினும் கோவிலுக்குள் தினமும் வழக்கமான பூஜை நடைபெறும் என்றார்.
Tags:    

Similar News