செய்திகள்
முதல்வர் நாராயணசாமி

கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்தி உள்ளோம்- சட்டசபையில் நாராயணசாமி தகவல்

Published On 2019-08-30 11:32 GMT   |   Update On 2019-08-30 11:32 GMT
விழுப்புரத்தில் இருந்து தான் கஞ்சா புதுவைக்குள் வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் பேசியதாவது:-

புதுவை முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா விற்பனை மாநிலம் முழுவதும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த இளைஞர்கள் பணத்திற்காக கொலை உள்ளிட்ட பல குற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் பல ஆயிரம் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை சீரழிந்துள்ளது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதான சட்டம் கடுமையாக இருந்தால்தான் தவறுகள் தடுக்கப்படும்.

புதுவையில் பெண்கள் அரை நிர்வாணமாக சுற்றி திரிகின்றனர். சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் அனைத்து தவறுகளையும் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை மகிழ்விக்க பல ஒட்டல்களில் அரைகுறை நிர்வாண நடனம் நடத்தப்படுகிறது.

செக்ஸ், குடி, கும்மாளம், ஆட்டம், பாட்டம், அரைகுறை ஆடையில் பெண்கள் அணிவகுப்பு இதுதான் சுற்றுலாவா? புதுவை செக்ஸ் சுற்றுலா பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. புதுவை மாநிலத்தை கேவலப்படுத்துகின்றனர். ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, இயற்கை சுற்றுலா என பிற மாநிலங்களில் உள்ளது. பல சுற்றுலா தலங்களில் மது அருந்தவும், புகை பிடிக்கவும், தடை உத்தரவு உள்ளது.

ஆனால், புதுவையில் அடுத்த தலைமுறை இளைஞர்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் சுற்றுலா நடக்கிறது. இந்த தவறான செயலை அரசு தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

புதுவையில் கஞ்சா, ஆன்லைன் கள்ள லாட்டரி விற்பதாக எங்கள் கவனத்திற்கு வந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கஞ்சா ரெயில் மூலம் கடத்தப்பட்டு கொண்டுவரப்படுகிறது. இருசக்கர வாகனம் வழியாகவும் கஞ்சா கொண்டுவரப்படுகிறது.

மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, வில்லியனூர் பகுதிகளில் வாகன சோதனை நடத்துகிறோம். கஞ்சாவை பறிமுதலும் செய்துள்ளோம். ரெயிலிலும் சோதனை நடத்தும்படி கூறியுள்ளோம். சிறுவர்கள் மூலமாக கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்கப்படுவதாக தகவலும் உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து தான் கஞ்சா புதுவைக்குள் வருகிறது. ஒரு பெண்தான் இதை விற்பதாக தகவல் கிடைத்துள்ளது. மாநில இளைஞர்களை பாதிக்கும் வி‌ஷயம் என்பதால் காவல் துறையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தொடர் நடவடிக்கையால் கஞ்சா விற்பனை கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News