செய்திகள்
கராத்தே பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

தேனியில் ஆயுதப்படை போலீசாருக்கு கராத்தே பயிற்சி- மாவட்ட சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

Published On 2020-10-18 13:57 GMT   |   Update On 2020-10-18 13:57 GMT
தேனியில் ஆயுதப்படை போலீசாருக்கு கராத்தே பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்தார்.
தேனி:

தென்மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் போலீசாருக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தேனி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வகுப்பு தேனி ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நேற்று தொடங்கியது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர், போலீசாருக்கு அளிக்கப்படும் பயிற்சியை பார்வையிட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

கராத்தே பயிற்சியாளர்கள் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி கராத்தே பயிற்சியில் சிறந்து விளங்கும் போலீசாரை கொண்டு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறுகையில், “ஒவ்வொரு போலீசாரும் நாட்டுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் மிக முக்கியமானவர்கள். போலீசார் உடல் அளவிலும், மனதளவிலும் எப்போதும் வலிமைமிக்கவர்களாக இருக்க வேண்டும்.

இதற்காக அளிக்கப்பட்டு வரும் பயிற்சியின் ஒரு அங்கமாக கராத்தே பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை திறம்பட போலீசார் மேற்கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் கலவரங்களை அடக்குதல் போன்ற நிகழ்வுகளில் இந்த பயிற்சி போலீசாருக்கு பயனுள்ளதாக இருக்கும்“ என்றார்.

பயிற்சியில் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன், இன்ஸ்பெக்டர்கள் சஜூகுமார், விஜயகாந்த் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News