ஆன்மிகம்
ரெங்கநாதர்

நாமக்கல் ரெங்கநாதர் கோவில் தேர் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

Published On 2021-10-28 03:27 GMT   |   Update On 2021-10-28 03:27 GMT
நாமக்கல் ரெங்கநாதர் கோவில் தேரை ரூ.56 லட்சம் செலவில் மராமத்து செய்து புதுப்பிக்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர் சுமார் 25 ஆண்டுகளாக மராமத்து பணி செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சட்டபேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி இத்தேரை சுமார் ரூ.56 லட்சம் செலவில் மராமத்து செய்து, புதுப்பிக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி தேர் மராமத்து செய்யும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-

தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள இந்த தேர் மராமத்து பணி இன்னும் 6 மாதங்களில் முடிவடையும். நாமக்கல் அருகே 4 ஆண்டுகளாக மூடி கிடக்கும் தமிழ்நாடு ஓட்டலை ஆய்வு செய்தேன். கொல்லிமலையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 13 ஹெக்டேர் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது. அதில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தி.மு.க. நகர பொறுப்பாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த், பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கொரோனா பரவலை தடுக்க தங்கத்தேர் வலம் வரும் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News