செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் 8 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு

Published On 2021-09-11 07:00 GMT   |   Update On 2021-09-11 08:32 GMT
சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் நகரம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வும் செய்யப்படுகிறது.
சென்னை:

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 1,600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் நகரம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வும் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

நாளை நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வார்டுக்கு ஒரு நிலையான தடுப்பூசி முகாமும், 2 நடமாடும் தடுப்பூசி முகாமும் செயல்படும். 3 குழுக்கள் ஒவ்வொரு வார்டிலும் இயங்கும். காலை, மதியம், மாலை என 3 பிரிவாக பிரித்து முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடமாடும் முகாம்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு இடத்தில் செயல்படும். ஒவ்வொரு வார்டிலும் 8 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.


சென்னையில் 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. இதுவரையில் 43 லட்சம் பேருக்கு மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 60 சதவீதமாகும். இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கடந்த 26-ந்தேதி அதிகபட்சமாக 1.35 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரி மாணவர்கள், அவரது பெற்றோர்கள் கட்டாயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களும் நாளை முகாம்களுக்கு சென்று செலுத்திக் கொள்ளலாம்.

இந்த பணியில் 600 டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் 3 ஆயிரம் மலேரியா பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 1,400 அங்கன்வாடி ஊழியர்கள் என மொத்தம் 7 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள்.

ரோட்டேரி சங்கம், இந்திய மருத்துவ சங்கம், கல்லூரி முதல்வர்கள், உயர்கல்வித் துறை அதிகாரிகள், சமூக நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மூலம் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்ற இடங்கள் மாநகராட்சி இணைய தளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது.

எனவே மாநகாட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும்
தடுப்பூசி
போட தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நோய்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News