ஆன்மிகம்
மகா தீபத்தின் போது பயன்படுத்தப்படும் தீப கொப்பரை சீரமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடக்கம்

Published On 2020-11-16 06:24 GMT   |   Update On 2020-11-16 06:24 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவையொட்டி மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில், கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா முக்கியமான விழாவாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவானது 10 நாட்கள் தொடர்ந்து வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறை எதிரே பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மகா தீபம் ஏற்றுவதற்கு 6 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது. மண்ணு நாட்டார் குடும்பத்தினர் கொப்பரை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபத்திருவிழாவின் போது 10 நாட்கள் காலை மற்றும் இரவில் சாமி மாட வீதியுலா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாட வீதியில் நடைபெறும் சாமி உலா நிகழ்ச்சிகள் ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திற்குள்ளேயே நடத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

அதன்படி, விழா நாட்களில் சாமி உலா செல்லும் வாகனங்கள் மற்றும் வெள்ளி விமானங்கள் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News